ரவி கருணாநாயக்க போல், ‘ஒன்றும் தெரியாது’ என்பவர்களாக, இன்றைய இளைஞர்கள் இருக்க முடியாது: அதாஉல்லா

🕔 August 7, 2017

– எம்.வை. அமீர் –

வி கருணாநாயக்கவைப் போன்று இன்றைய இளைஞர்கள் “ஒன்றும் தெரியாது” என்று கூறுபவர்களாக இருக்க முடியாது. யாரை திருடன் என்று, யார் யாரெல்லாம் ன்னார்களோ, அவர்கள்தான் முழு திருடர்களாக,  மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்ப்பாகும் என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மருதமுனை மனாரியன்ஸ் நண்பர்கள் வட்டம் நடத்திய 22 விளையாட்டுக்கழகங்கள் பங்குகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமைப்பின் தலைவர் ரி. முபாரிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அதாவுல்லாஹ் கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“இளைஞர்கள் என்போர் சமுதாயத்தினுடைய முதுகெலும்புகள். இளைஞர்களை வைத்தே அவர்களின் காலத்தினுடைய நாகரீமும், அவர்கள் சார்ந்த சமுதாயத்தினுடைய சிந்தனை, போக்கு, வீரம் உள்ளிட்டவை தீர்மானிக்கப்படுகின்றன. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, அஷ்ரப் பெரும் தலைவராக அடையாளம் காணப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலே, ஆயுதம் தூக்குவதிலிருந்து தவிர்ந்து, ஜனநாயக வழியில் எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் வாருங்கள் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தலைவர் அஷ்ரப்புடன்  இணைந்து இந்த நாட்டில் பெரிய சக்தி ஒன்றினை உருவாக்கிச் சென்றதனை நாங்கள் மறந்துவிட முடியாது. ஆனால், கால ஓட்டத்தில் நமது தலைவர் மரணித்தார். பின்பு, அந்த இயக்கத்தினரும் அதற்கு வாக்களித்த மக்களும் இன்றிருக்கின்ற இளைஞர்களும் தடுமாறி மூக்கணான் கயிறில்லாத வண்டிகளைப்போன்று, எங்குபோகிறோம் என்ற கொள்கை இல்லாதவர்கள் போன்று சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்றைய சூழலில் கட்சிகள் என்ற நிலைப்பாட்டுக்கு அப்பால், நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் நமக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வோமாக இருந்தால் போதும். எதிர்காலத்தில் இந்த சமூகத்துக்கு நீங்கள் தலைமை வகிப்பீர்கள், எந்தவிதமானதொரு சந்தேகமுமில்லை.

நாங்கள் வாழுகின்ற இந்தக்காலத்தில் ஒரு காலமுமில்லாதவாறு மோடியினுடைய அரசாங்கத்தில் இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாட்டைப்பற்றி சொன்னால் கொல்கிறார்கள், முஸ்லிம் என்றால் கொல்கிறார்கள். மகாத்மா காந்தி உருவாக்கிய ஜனநாயக இந்தியாவில் இவ்வாறான நிலை நிலவுகிறது. அந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாது தடுமாறுகிறார்கள். அதனுடைய தொடர்ச்சி இலங்கையிலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருகின்றது.

கடந்த அரசாங்கத்தில் என்னென்ன பிழைகளையேல்லாம் சொல்லி முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்று ,ஆட்சியை கைப்பற்றினார்களோ, அந்த அநியாயங்களை 200 மடங்கு அதிகமாக இன்றைய அரசாங்கம் புரிந்து வருவதனை நமது மக்கள் மிகவும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிரார்கள். இலங்கையில் என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது. முஸ்லிம்கள் எங்கும் உரிமையோடு வாழ முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வில்பத்து என்றாலும் எங்களுக்குப் பிரச்சினை, வடமாகாணத்தில் முல்லைத்தீவிலே 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களுடைய இல்லடங்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றபோது தமிழ் பேரினவாதிகள் அதற்கு எதிராக குரல்கொடுக்கிறார்கள்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள்,  சிங்கள மக்கள் மத்தியிலே வாழ்கின்றபோது அவர்களையும் விரட்டியடிக்க முற்படுகிறார்கள். பள்ளிகளுக்கு கல்வீசுகிறார்கள். இவற்றினை அடக்கப்போகின்றோம் என்று வந்தவர்கள், இன்று அதைவிடவும் அதிகமாக செய்துகொண்டு வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

மத்திய மலைநாட்டிலே வடக்கு கிழக்கு கலாசார நிகழ்வின்போது, இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் எல்லோரையும் கூட்டிவைத்துவிட்டு, அங்கு வந்தவர்களில் சிலர் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார்கள். அதன்போது சிலர் வெளியேறி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் தொட்டுசொல்வதற்கான காரணம்; உங்களுக்கு இன்னும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் வருங்காலத்தினுடைய தலைவர்கள். நாங்கள் இளமையில் பெற்ற பயிற்சிகள்தான், எங்களை தலைவர்களாக்கின.

இன்றைக்கு முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையானது கட்சிகளுமல்ல பெரும் அரசியல் பொறுப்புகளுமல்ல. இன்று முஸ்லிம் சமூகத்துக்குத் தேவைப்படுவது அல்லாஹ்வுக்கும், நபியும் கூறியபடி கருணை காட்டி, அன்பு செலுத்தக் கூடிய ஒரு தலைவர்தான். அவ்வாறான தலைவர் – ஊருக்கு ஒருவர் வேண்டும். ராஜா தேவையில்லை.

ஒவ்வொரு காலத்திலும் தேர்தல் வருகின்றபொழுது களியாட்டங்களுக்கு, திருவிழாக்களுக்கு கடைகளைத் திறப்பதைப்போன்று மருதமுனையிலும் பல அரசியல் கடைகள் முளைக்கும். முஸ்லிம் காங்கிரஸ் கடை, தேசிய காங்கிரஸ் கடை, மக்கள் காங்கிரஸ் கடை,  ஐக்கியதேசியக்கட்சிக் கடை என்று அவற்றின் பட்டியல் நீளமானவை.  ஆனால் தலைவர் அஷ்ரப்புக்குப் பின்னர்  எந்த கடைகளாலும் நாங்கள் உயர்ச்சிபெறவில்லை.

தலைவர் அஷ்ரப் மக்களிடம் சொன்னார்; உங்களுக்கு நாங்கள் ஒன்றுமே தரமாட்டோம்; விளையாட்டு மைதானம் தரமாட்டோம், நிவாரணங்கள் தரமாட்டோம், இழப்பீட்டு பணங்கள் தரமாட்டோம், ஆனால் உங்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுத்தருவோம் என்றார். வாக்கு என்பது பெறுமதியானது, அதனை சரியாகப் பாவிக்கவேண்டும், அரசியல் இல்லாமல் எந்த விடுதலையும் இல்லை என்றார். அப்போதுதான் வாக்கினுடைய பலத்தை நாம் அறிந்து கொண்டோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்