சிலாவத்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டடம்; றிசாத் அழைக்க, ராஜித திறந்து வைத்தார்
🕔 August 7, 2017
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில், சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, இன்று திங்கட்கிழமை மன்னார் சிலாவத்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
கடந்த மாதம் அமைச்சர் ராஜித சேனாரட்னவை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கொழும்பில் சந்தித்து புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை எடுத்துரைத்திருந்தார். அந்த சந்திப்பின் பின்னர் இந்த பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளின் புனரமைப்புக்காகவும் ஏனைய வைத்திய வசதிகளுக்காகவும் அமைச்சர் ராஜித நிதியொதுக்கீடுகளை செய்திருந்தார்.
சிலாவத்துறை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளான வைத்தியர்கள் பற்றாக்குறை, தாதியர் பற்றாக்குறை, வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பில் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடியலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விரிவாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் அமைச்சர் ராஜித சேனாரட்ன, உடனடி தீர்வு வழங்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் சிலாவத்துறை வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன; அதற்குறிய திட்ட வரைபுகளையும், ஆவணங்களையும் ஒரு மாதகாலத்துக்குள் சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளைப் பணித்தார்.
மன்னார் சிலாவத்துறை வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன், வி. ஜயதிலக, கிரபைட் லங்கா நிறுவனத் தலைவர் அலிகான் ஷரீப் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.