கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம்

🕔 July 9, 2017

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுபவருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர். ஆனாலும், அந்த மூன்றில் ஒரு பங்கினருக்குத்தான் அரசியல் அடர்த்தியும் திடகாத்திரமும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம் கூட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று, மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் உயர்பீட உறுப்பினரும், முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கத்துக்காக முன்னின்று உழைப்பவர்களில் ஒருவருமான நஸார் ஹாஜி, மு.காங்கிரசின் முன்னாள் உயர்பீட உறுப்பினரும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அங்கு பசீர் சேகுதாவூத் தொடர்ந்து பேசுகையில்;

“முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி செயற்படுகின்ற காலகட்டத்தில், உண்மையான முஸ்லிம் காங்கிரசை மீட்டுக் கொண்டால், பழையபடி முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஒற்றைக் கட்சியாக எல்லோரையும் ஒன்றிணைத்து செயற்படுவோம். அதாவது, முஸ்லிம் கூட்டமைப்பு என்பதே அப்போது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்.

முஸ்லிம் கூட்டமைப்பு தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர்களும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆட்சிக்கு வந்தவர்களின் கொள்கைகள் அனைத்தும் தோற்றுப் போய் விட்டன. முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மஹிந்தவை தோற்கடித்தால்தான் முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதற்காககத்தான், முஸ்லிம்கள் நல்லாட்சியைக் கொண்டுவந்தார்கள். ஆனால், இப்போது முஸ்லிம்களின் பிரச்சினை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.

எந்தவொரு காலத்திலும் பௌத்த நிகாயக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசியதில்லை. ஆனால், இப்போது பேசியுள்ளார்கள். ஆகவே, இவற்றை எதிர்நோக்க வேண்டும். இவற்றையெல்லாம் அரசியல் ரீதியாகத்தான் எதிர்நோக்க வேண்டும். அதேவேளை, அதனை கவனமாகவும் பிழைத்து விடாதபடியும் எதிர்கொள்ள வேண்டியுமுள்ளது. இல்லாவிட்டால், ஆபத்து அருகில் வந்துவிடும்.

முஸ்லிம்கள் தொடர்பான பௌத்த நிகாயக்களின் கருத்துகளுக்கு எதிராக, இஸ்லாமிய மார்க்க இயக்கங்களெல்லாம் அறிக்கை விடத் தொடங்கியுள்ளன. அந்த அறிக்கைகளைப் பார்க்கும் போது, நெஞ்சு பதைக்கிறது.

பௌத்த தரப்பிலுள்ள சிலர், பௌத்த மதத்தை அரசியலாக்கி, முஸ்லிம்களுக்கு எதிராக, முஸ்லிம்களை மதவாதிகளாகக் காட்டி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க நிறுவனங்கள் பதில் சொல்லப் போனால், அது – ஆபத்தாக வந்துவிடும். எனவே, இவ்வாறான பிரச்சினைகளின் போது, இஸ்ஸாமிய இயங்கங்களிடம்; “நீங்கள் இருங்கள், நாங்கள் இந்த விடயத்தைக் கையாள்கிறோம்” என்று சொல்லக் கூடிய தகுதி, உருவாகவுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு வர வேண்டும்.

முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகி, அது – கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அங்கீகாரத்தினைப் பெறும்போது, கிழக்கு மாகாண முஸ்லிம்களின் குரல்தான், அகில இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும். மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் அதைத்தான் செய்தார். எந்தவிதக் கூட்டமைப்பும் இல்லாமல் தனிக் கட்சியின் மூலம் அஷ்ரப் அதனைச் சாதித்தார்.

ஆனால், அஷ்ரப்பின் அந்தக் கட்சி இப்போது மழுங்கிப் போய் விட்டது. முடமாய் போய்விட்டது. திட்டமிட்டு அந்தக் கட்சியினை தனியானதொரு கம்பனியாக்கி விட்டார்கள். கட்சியை தமது மடிக்குள் கொண்டு சென்று விட்டார்கள். கட்சியை தங்கள் வங்கிக் கணக்குகளுக்குள் கொண்டு சென்று விட்டார்கள். தாருஸ்ஸலாத்தைக் கொள்ளையடித்து விட்டார்கள். முஸ்லிம் சமுதாயம் தேர்ந்தெடுத்த முஸ்லிம் காங்கிரஸ் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.

இழப்பதற்கு இன்னும் எது இருக்கிறது நம்மிடம்? ஆகவேதான் முஸ்லிம் கூட்டமைப்பு தேவையாகவுள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்