மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

🕔 July 2, 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார்

குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அங்கு மேலும் பேசுகையில்;

“அண்மையில் இலங்கை – பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கட் சுற்றுப் போட்டியின் போது, இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தது. இதனை தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி, இலங்கை அணியின் தோல்விக்கு அவர்களின் உடற் தகுதி காரணமா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்க கூறுகையில்; ‘கிளியின் கூடு பற்றி, குரங்குக்கு என்ன தெரியும்’ என, கேள்வி எழுப்பியிருந்தார்.

கிரிக்கட் அணி வீரர்களின் உடற் தகுதி பற்றி அமைச்சர் தயாசிறி கேள்வியெழுப்பியதன் மூலம், இலங்கை கிரிக்கட் அணி வீரர்களை நேரடியாகவே அவமானப்படுத்தியுள்ளார். இதனை இன்னுமொரு வகையில் நமது பாசையில் கூறுவதால் ‘சும்மா சப்பிக்கொண்டு கொளுத்து கிடக்கின்றார்களா எனபார்க்க வேண்டும்’ என கூறலாம். இதனை கேட்கும் ஒரு மானமுள்ள விளையாட்டு வீரனுக்கு கோபம் வருவதில் தப்பில்லை. முதலில் இலங்கை கிரிக்கட் வீரர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தயாசிறி மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருந்த போதிலும் பிரபல வேகப்பந்து வீச்சாளர் மலிங்க, அமைச்சரை நோக்கி கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்றே கூறியிருந்தார். இங்கு மலிங்க அமைச்சரை நேரடியாக குரங்கு என குறிப்பிடவில்லை. அவரின் அறியாமையை விளங்கப்படுத்த ஒரு வசன நடையை பயன்படுத்தினார்.

இதனை முன்னிறுத்தி, இலங்கைக்கு பல பெருமைகளை சேர்த்த, கிறிக்கட் அணியின் முதுகெலும்பான  மலிங்க மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயமானது மலிங்க ஒழுக்கமற்றவர் என்ற செய்தியை உலகுக்கே கூறுவதோடு, எதிர்காலத்தில் அவரின் கிரிக்கட்  மீதான ஆர்வத்தையும் சோர்வடையச் செய்து விடலாம். ஏனையவர்கள் விடயத்திலும், இவ்வாறு மிகக் கடுமையான ஒழுக்க விதிகள் கடைப்பிடிக்கப்பட்டால், மலிங்க விவகாரத்தை நாம் பிழையாக கூற முடியாது. இவ்வாறான ஒழுக்கம் மிகுந்த நாட்டில் வாழ்வதையிட்டு பெருமிதம் கொள்ள முடியும்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை குருநாகலில் வைத்து பொலிசார் கைது செய்யச் சென்ற போது, இலங்கை நாட்டின் பிரதமரை ஞானசார தேரர்; ‘பொன்னையன்’ என்ற கடுமையான வார்த்தை பிரயோகம் கொண்டு ஏசியிருந்தார். இது தொடர்பில் அவரிடம் இதுவரை எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை நாட்டின் பிரதமரை அவமதிப்பதானது முழு இலங்கை நாட்டுக்குமான அவமானமாகும்.

இலங்கை நாட்டுக்கு சர்வதேச ரீதியில் புகழ் பெற்றுக்கொடுத்த மலிங்க மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடிந்த இவர்களால், பிரதமரை அவமதித்து இலங்கை நாட்டையே அகௌரவப்படுத்திய ஞானசார தேரருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் போனமையானது இலங்கை நாட்டின் நலிவான ஒழுக்கப் போக்கினையே எடுத்துக் காட்டுகிறது.

ஞானசார தேரர் மற்றும் மலிங்க ஆகிய இருவரின் கூற்றுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, அனைத்து வகையிலும் ஞானசார தேரரின் கூற்றே அதிக ஒழுக்கமின்மையை காட்டுகிறது. இலங்கை நாட்டின் நீதியானது அனைவருக்கும் ஒரே விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். அல்லாது போனால் சில தவறான முன் மாதிரிகள் இலங்கை நாட்டின் சந்ததிகளை அடையும் என்பதை இலங்கை நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இவ்விடயத்திலிருந்தாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

உலகில் வாழும் பல கோடி மக்கள் தங்களது இறைவனாக வணங்குகின்ற அல்லாவையே ஞானசார தேரர் பல தடவைகள் ஏசியுள்ளார். அதனையெல்லாம் சிறிதேனும் பொருட்படுத்தாது அவரை பாதுகாக்கின்ற  இவ் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது” என்றார் .

Comments

புதிது பேஸ்புக் பக்கம்