ஜனாதிபதியின் இப்தாருக்கு நீங்கள் வந்தால், ஞானசார சரணடைவார்: திரை மறைவில் நடந்த ஒப்பந்தம்

🕔 June 21, 2017
– ஏ.எச்.எம். பூமுதீன் –

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை – எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில் விடுதலையான அவர்- அடுத்த 15 நிமிடங்களில் புலனாய்வுப் பிரிவினரால் கைதாகி மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நகைச்சுவை சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் பின்னணியில் பாரிய கபட நாடகம் ஒன்று, நிபந்தனை என்ற போர்வையில் அரசாங்கத்துக்கும் – எமது மதிப்புக்குரிய முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தற்போது அறிய வருகின்றது.

இரண்டு முக்கிய நோக்கம் அல்லது எதிர்பார்ப்பின் அடிப்படையில் அந்த நிபந்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன்தான் – முஸ்லிம்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் அரசின் அவசியம் ஒன்று. அடுத்து, தமக்கு வாக்களித்த முஸ்லீம் சமூகத்திடம் இருந்து தம்மை பாதுகாக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கபடம்.

இந்த ரீதியில் , அரசாங்கத்துக்கும்- முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை புறக்கணிப்போம் என்ற எழுச்சி வேண்டுகோள், முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தி இருந்தது.

மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் என்றுமில்லாதளவு முஸ்லிம்கள் பங்கு கொண்டிருந்த நிலையில் , ஜனாதிபதியின் இப்தாரை முஸ்லிம்கள் புறக்கணித்தால் அது அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை நிச்சயம் ஏட்படுத்தும்.

எனவே, ஜனாதிபதியின் இஃப்தாருக்கு முஸ்லிம்கள் வரவேண்டுமென்றால், அதற்குள்ள ஒரே வழி, ஞானசாரரை கைது செய்வதேயாகும் என்பதை உணர்ந்ததன் பேரில், அரசாங்கமும் – எமது முஸ்லீம் அரசியல்வாதிகளும் இணைந்து எடுத்த முடிவுதான், இன்று காலை நாம் வியப்புடன் பார்த்த ஞானனசாரவின் சரண்- பிணை – கைது – பிணை எனும் பூனை – எலி நாடகமாகும்.

ஆக, 05 நிமிட இஃப்தாருக்கு ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகமும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இத் தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்மை, நியாயம், உண்மைக்கு பெயர்போன சிரேஷ்ட  அரசியல், ஊடக கனவான்கள்.

ஜனாதிபதியின் இன்றைய இஃப்தாருக்கு முஸ்லிம்களை வரவையுங்கள் , நாளை ஞானசாரர் நீதிமன்று சமூகமளிப்பார். இன்றேல், அவர் இருப்பது போன்று இருக்கட்டும், உங்கள் சமூகத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்ற தோரணையில் பேச்சு இடம்பெற்றுள்ளது. இதற்கு எமது அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் முஸ்லிம்களை எவ்வாறு இதற்கு இணங்க வைப்பது என்ற தலைச் சொறிச்சலுக்குள்ளான எமது அரசியல்வாதிகளுக்கு, ஒரு விடயம் கணீரென பட்டுள்ளது.

அந்த ரீதியில் – ஜனாதிபதியின் இஃப்தாருக்கு சென்றவர்களில் 90 வீதமானோர் எமது அரசியல் வாதிகளின் காரியாலயங்களில் பணிபுரிகின்றவர்களாவர். வெளி முஸ்லீம் சகோதரர்கள் என்று கூறுமளவுக்கு அங்கு யாரையும் காணவேயில்லையாம்.

எப்பிடியோ, முஸ்லிம்கள் – ஜனாதிபதியின் இஃப்தாருக்கு போனால் சரிதானே என்ற அடிப்படையில், காரியாலய ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆக – இங்கு அரசாங்கம், தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ள அதேநேரம், முஸ்லீம் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களும் பகடைக்காயாக பாவிக்கப்பட்டுள்ளனர் என்பதையே ஞானசாரவின் இன்றைய சரணும் பிணையும், கைதும் பிணையும் எமக்குத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

இங்கு நாம் ஒன்றை விளங்கிக்கொள்தல் வேண்டும். அரசாங்கத்தின் மேல் முஸ்லிம்கள் ஆத்திரம் அடைவது மகா முட்டாள்தனமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்