புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது
– அஹமட் –
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், இன்று புதன்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வினை, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் புறக்கணித்துள்ளார்.
தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிப்பார் என, ஏற்கனவே நாம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தவத்துக்கும் நசீருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே, தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிக்கவுள்ளார் என அந்தச் செய்தியில் நாம் தெரிவித்திருந்தோம்.
மாகாணசபை உறுப்பினர் தவம், தனது இப்தார் நிகழ்வுக்கென அச்சிட்ட அழைப்பிதழில், சுகாதார அமைச்சர் நசீருடைய பெயரை சேர்க்கவில்லை. இதனால், கோபமடைந்த நசீர், தவத்தின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்று, தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார். இதனை நாம் செய்தியாக்கியிருந்தோம்.
இதேவேளை, மாகாண அமைச்சர் நசீர், அட்டாளைச்சேனையில் நடத்திய இப்தார் நிகழ்வுக்கான அழைப்பிதழில் தவத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. இதனால்தான், தவம், தன்னுடைய அழைப்பிதழில் நசீரின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தார் எனவும் அறிய முடிகிறது.
தவத்தின் இப்தாரை அமைச்சர் நசீர் புறக்கணிக்கவுள்ளார் என, நாம் செய்தி வெறியிட்டமையினை அடுத்து, தனது இப்பதார் நிகழ்வுக்கான பதாதைகளில், அமைச்சர் நசீரின் படங்களை தவம் சேர்த்துக் கொண்டார். ஆயினும், தவத்தின் இப்தாரை புறக்கணிக்கும் முடிவிலிருந்து அமைச்சர் நசீர் மாறவில்லை.
“மாகாணசபை உறுப்பினர் தவத்துக்கு இது வாடிக்கையான செயலாகும். தவத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் நடைபெற்ற பல நிகழ்வுகளில், மாகாண அமைச்சர் நசீரை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். ஆனால், அந் நிகழ்வுகளின் வரவேற்பு பதாகைகளில் நசீரின் படங்களை பெரும்பாலும் உள்ளடக்காமல் தவம் தவிர்த்து விடுவார். அல்லது, நசீரின் படங்களை வேண்டுமென்றே, மிகச் சிறியதாக்கி விடுவார். இது, அழைத்து அவமானப்படுத்தும் செயலாகும். இதனை அமைச்சர் நசீர், கண்டும் காணாமல் விட்டு வந்தார். ஆனால், இம்முறை, அழைப்பிதழில் அமைச்சரின் பெயரை வேண்டுமென்றே திட்டமிட்டு தவம் அச்சிடவில்லை. அதனால்தான், அவரின் இப்தார் நிகழ்வினை அமைச்சர் புறக்கணிக்கும் நிலை உருவானது” என்று, அமைச்சர் நசீருக்கு நெருங்கிய ஒருவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் தனக்கென பெரிய வாக்கு வங்கியினைக் கொண்டிராத தவம், ஏனைய பெரிய ஊர்களிலுள்ள வாக்குகளையே, தனது வெற்றிக்கு நம்பியிருக்கும் நிலையில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நசீரை பகைத்துக் கொண்டமையானது, தவத்தின் அரசியலில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நசீரைப் பகைத்துக் கொண்டமையானது, தவத்துக்கு பெரும் நஷ்டமாகும்.
தொடர்பான செய்தி: பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை