ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

🕔 June 6, 2017

– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளார் என்று, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு அறிவித்துள்ளது.

அட்டாளைச்சேனையில் நடைபெறும் இப்தார் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ஹக்கீம் வருகை தரவுள்ளார் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று, மூன்றாவது தடவையாகவும் வாக்குறுதியளித்து , ஏமாற்றி விட்டு, அந்த ஊருக்கு வருகை தரவுள்ள ஹக்கீமுடைய தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

அதேவேளை, இத்தனை தடவை ஏமாற்றப்பட்டும் சூடு சொரணையற்று, ஹக்கீமை வரவேற்க காத்திருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. ஆதரவாளர்களின் அப்பாவித்தனத்தினையும் நொந்து கொள்ளாமல் இருக்கவும் இயலவில்லை.

அட்டாளைச்சேனைக்கு ஒரு தளபதியாக இருந்து மு.காங்கிரசை வளர்த்த மர்ஹும் மசூர் சின்னலெப்பைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று பகிரங்கமாக மேடைகளில் வாக்குறுதியளித்து விட்டு, பின்னர் அவரை ஹக்கீம் ஏமாற்றியதை, மசூர் சின்னலெப்பையை நேசிப்பவர்கள் ஒருபோதும் மறந்து விடப் போவதில்லை.

மர்ஹும் மசூர் சின்னலெப்பை உளரீதியாக சோர்ந்து  விழுந்தமைக்கு, மு.கா. தலைவர் ஹக்கீமின் அந்த ஏமாற்று வேலை மிகப் பிரதானமாக அமைந்தது.

இப்போது மூன்றாவது தடவையாகவும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று சத்தியம் செய்துவிட்டு, அதனை தனது அந்தரங்க நண்பன் சல்மானுக்கும், தனது மனைவியின் உறவுமுறைப் பெண்ணை திருமணம் செய்துள்ள எம்.எஸ். தௌபீக்குக்கும் ஹக்கீம் வழங்கியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அட்டாளைச்சேனைக்கு 16ஆம் திகதி ஹக்கீம் வருகின்றார். அப்போது, மு.கா. தலைவரிடம், அட்டாளைச்சேனையிலுள்ள அப்பாவி மு.கா. ஆதரவாளர்கள்; தமது ஊருக்குத் தருவதாக வாக்குறுதியளித்த தேசியப்பட்டியல் பற்றி கேட்பார்கள். அதற்குப் பதிலளிக்கும் வகையில் பொதுக் கூட்ட மேடையில் ஹக்கீம்; “அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக வழங்கிய வாக்குறுதியிலிருந்து (இந்த இடத்தில் ‘வஹ்தா’ என்கிற அரபுச் சொல்லை ஹக்கீம் பயன்படுத்துவார்) மு.கா. தலைமை ஒருபோதும் விலக முடியாது. சற்றுக் காலதாமதமானாலும், அட்டாளைச்சேனைக்குரிய அந்தக் கௌரவத்தினை மு.கா. தலைமை வழங்கியே தீரும். இதில் இரண்டு பேச்சுக்கு இடமில்லை” என்று உரத்த குரலில் கூறுவார்.

பிறகென்ன, வழமைபோல் மு.கா.வின் அட்டாளைச்சேனை ஆதரவாளர்கள்; “நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்” என்று, உரத்த குரலில் கோசமிடுவார்கள்.

அத்துடன், எல்லாம் அடங்கிப் போகும்.

பிறகு, அடுத்த தேர்தலொன்று வரும் போது, அட்டாளைச்சேனை மக்கள் ஹக்கீமை தமதூரில் சந்திக்கலாம்.

அப்போதும், அப்பாவி ஆதரவாளர்களிடம் சொல்வதற்கு, ஹக்கீமிடம் ‘கதை’யொன்று இல்லாமலா போய்விடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்