பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார்

🕔 June 7, 2017

– மப்றூக் –

ய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும், சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்து, அன்னார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக முஸ்தபா நோய்வாய்ப்பட்டிருந்தார்.

இவர் அம்பாறை மாவட்டம் – கல்முனை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

1945ஆம் ஆண்டு பிறந்த எம்.ஐ.எம். முஸ்தபா, ஆசிரியராகவும் அதிபராகவும் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

பாடசாலைக் காலம் முதல் சாரணியத்தில் ஈடுபாடு கொண்ட இவர், பின்னாளில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட சாரண உதவி ஆணையாளராகப் பதவி வகித்தார்.

மேலும், இவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1965ஆம் ஆண்டு முதல், வீரகேசரியின் பிராந்திய நிருபராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், இரண்டு தசாப்தங்கள் தொடர்ச்சியாக எழுதி வந்தார்.

இவரின் அனுவபத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தனது ஆலோசகர்களில் ஒருவராக எம்.ஐ.எம். முஸ்தபாவை நியமித்தது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த நிகழ்வு, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற போது, சில மூத்த ஆளுமைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அதில், ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக எம்.ஐ.எம். முஸ்தபாவும் கௌரவிக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

எல்லோருடனும் மிகவும் நட்புடனும், சிரித்த முகத்துடனும் பழகிய அன்னாருக்கு, இறைவன் மேலான சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என, இந்த நேரத்தில் பிராத்தித்துக் கொள்கிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்