மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம்: ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு; ஒரு வெட்டு முகப் பார்வை

🕔 May 10, 2017

 

– சுஐப் எம். காசிம் –

றிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்தினம் மாலை (2017.05.08) தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது ஓர் ஆரோக்கியமான வெற்றியின் முதற்படிக்கல்லாகும்.

ஜனாதிபதியுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வர்த்தமானி பிரகடனத்தால் முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் பிரமுகர்கள் விலாவாரியாக தெளிவுபடுத்தினர். ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் வடக்கு முஸ்லிம்களின் அவலங்கள், கடந்த காலங்களில் அவர்கள் சந்தித்த இடர்பாடுகள் 2012, 2017 ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஜனாதிபதிக்கு ஓர் அறிமுக விளக்கத்தை தெரிவித்தார்.

அதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக முன்னால் புவியியல் துறை கலாநிதி நவ்பல், வில்பத்து பிரதேசம், மறிச்சிக்கட்டி, முசலி பிரதேசங்கள் அடங்கிய வரைபடங்கள், 2012 ம் ஆண்டு வர்த்தமானி பிரகடனத்தில் ஏற்பட்டிருந்த பிழைகள் (எல்லை நிர்ணய ஒருங்கிணைப்புப் புள்ளி) ஆகியவற்றை பல்லூடகம் வழியாக ஜனாதிபதிக்கு காண்பித்தார்.

இவற்றை பொறுமையுடனும் உன்னிப்பாகவும் அவதானித்த ஜனாதிபதி இடைக்கிடை சில சந்தேங்களைத் தொடுத்தார். அமைச்சர்களான றிஷாட் பதியுதீனும், பைசர் முஸ்தபாவும் வர்த்தமானி பிரகடனங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து சுட்டிக்காட்டியபோது ஜனாதிபதியும் தனக்குரித்தான பாணியில் ஜனாதிபதி என்ற தோரணையில் சில விடயங்களை முன்வைத்தார்.

மக்கள் குடியிருப்புக்களையோ அவர்கள் வாழும் பகுதிகளையோ உள்ளடக்கி தான் வர்த்தமானி பிரகடனத்தை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கவில்லை. ஏதோ நடந்திருக்கின்றது தமிழ் சிங்கள முஸ்லிமென்று கருதி வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடவில்லை சூழலை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது‘. இவ்வாறு அழுத்தமான தொனியில் கூறிய ஜனாதிபதி அங்கிருந்தவாறு உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தினார்.

மக்கள் வாழும்  குடியிருப்புப்பகுதிகள் வர்த்தமானி பிரகடனத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக என்னை சந்திக்க வந்துள்ள முஸ்லிம் தலைவவர்களும் அமைப்புக்களும் கூறுகின்றன இதன் உண்மை நிலவரம் என்னவென்று அவர் தொடர்புகொண்ட அதிகாரியொருவரிடம் கேட்ட போது, அவரது பதிலில் தெளிவில்லாததை கூட்டத்தில் இருந்த நாங்கள் உணர்ந்து கொண்டோம். அந்த அதிகாரியுடன்  ஜனாதிபதி மிகவும் கடும்தொனியில் பிழைநடந்திருந்தால் உரியவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி நேரிடுமெனவும் தெரிவித்தார்.

அமைச்சர்களான பைசர் முஸ்தபா, றிஷாட் பதியுதீன், மற்றும் அசாத் சாலி, ஹில்மி அஹமட்  ஆகியோர் மீண்டும் ஜனாதிபதியிடம் சில விடயங்களை தொட்டுக்காட்டினர்.  

1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை விரட்டுவதற்கு முன்னர் எவ்வாறு தமது பூர்வீக நிலங்களில் வாழ்ந்து எவ்வாறு தமது தொழிலுக்கு மேட்டு நிலங்களையும், வயல் நிலங்களையும் பயன்படுத்தினார்களோ அதே நிலையை மீண்டும் எந்தவிதமான தடைகளுமின்றி ஏற்படுத்தித்தர வேண்டுமென அமைச்சர்கள் கோரினர்.

இதனைச் செவிமடுத்த ஜனாதிபதி ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக மூவரடங்கிய சுயாதீனக்குழுவொன்றை நியமிக்கும் வகையில்; தனது செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளதையும் நினைவுபடுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த றிஷாட், தன்னிடம் பிரதிநிதியொருவரை  கேட்டிருப்பதாகவும் எனினும் இந்த ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கி எந்தப் பாரபட்சமுமின்றி விசாரணைகளை நடாத்தி உண்மை நிலைகளை கண்டறிவதன் மூலமே முசலிப்பிரதேச மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் இன்னும் தனது பிரதிநிதியை வழங்கவில்லை என்றார். எனினும் அமைச்சர் றிஷாட்டிடம் பிரதிநிதியின் பெயரை தருமாறு ஜனாதிபதி வேண்டினார்.

பல்வேறு கருத்துப்பரிமாறல்களின் பின்னர் எதிர்வரும் 13ம் திகதி உயர்மட்ட சந்திப்பொன்றை தனது செயலாளருடன் ஏற்படுத்தி உரிய தீர்வை பெற்றுக்கொள்ளும் வழிவகைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்ததுடன் தனது செயலாளருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையிலேயே கவனயீர்ப்புப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை விடப்பட்டது.

மறிச்சிக்கட்டி விககாரம் எழுந்ததன் பின்னர் ஏற்பட்ட சந்திப்புக்களைவிட இந்த சந்திப்பு வெற்றியின் உச்சக் கம்பத்தை தொடுவதற்கான வழிகளைத் திறந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ரஷ்யாவில் வைத்து இந்த பிரகடனத்தில் கைசாத்திட்ட போதும் அவர் இந்த இடத்தில் அமைச்சர் என்ற ஸ்தானத்துக்கு அப்பால் ஜனாதிபதியாகவும் இருப்பதால,; தான் கையெழுத்திட்ட வர்த்தமானியை இரத்துச்செய்வதென்பதை நாம் எதிர் பார்க்க முடியாது. எனினும் இதன் பாராதூரத்தை அவர் உணர்ந்து அதில் ஏற்பட்டுள்ள தவறுகளை திருத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம்பெற்றுத்தர முடியும்.

எது எப்படி இருந்த போதும் 1990ம் ஆண்டுக்கு முன்னர் இந்த பிரதேச மக்கள் தங்கு தடையின்றி சுதந்திரமாக தமது வாழ்விடங்களில் எவ்வாறு வாழ்ந்தார்களோ அந்த நிலையை ஏற்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை இலகுவாகத் தீர்க்க முடியும்.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது முசலி மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் அவர்களின் பிரதிநிதியான அமைச்சர் றிஷாட் பல வருடங்களாக இனவாதிகளுடன் போராடி வருகின்றார். இனவாத சிங்கள ஆங்கில இலத்திரனியல் அச்சு ஊடகங்கள் அவரை கேவலமாகவும் மோசமாகவும் ஏசுகின்றன. எனினும் அந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அவற்றைத் தாங்கிக்கொண்டு சவால்களுக்கு முகம்கொடுத்து அவர் போராடுவது நியாயமே எனினும் கொழும்பிலே பிறந்து இந்தப்பிரதேசத்தில் வாழந்து வரும் அமைச்சர் பைசர் முஸ்தபா அசாத்சாலி , முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், உபதலைவர் ஹில்மி அஹமட், பி.எம்.பாருக் ஆகியோர் வடபுல சமூகத்துக்காக சமூகத்துக்காக ஜனாதிபதியுடன் பேசிய பாங்கானது, அந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தவன் வகையில் என்னை மெய் சிலிர்க்கச் செய்தது

ஜனாhதிபதியுடனான சந்திப்பு முடிவடைந்த பின்னர் பைசர் முஸ்தபாவும் அசாத் சாலியும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொடர்பு கொண்டு நிலமைகளை எடுத்துக்கூறி இந்த விடயத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென உறுதியுடன் தெரிவித்தனர்.

வில்பத்து விடயம் எப்போது ஆரம்பித்ததோ அப்போது இருந்தே இந்த மக்களுக்காக குரல் கொடுத்து இரவு பகல் என்று பாராது பல்வேறு கூட்டங்களை ஏற்பாடு செய்து உதவிய ஜம்மியத்துல் உலமா மற்றும் 56 இயக்கங்களை உள்ளடக்கிய முஸ்லிம் கவுன்சில், ஸூரா கவுன்சில் உட்பட இன்னும் பல்வேறு இயக்கங்களுக்கும் இந்த நியாயமான  போராட்டத்துக்கு உத்வேகமளித்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்த இத்தூதுக்குழுவில் அகில இலங்கை  முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் பீ.எம். பாரூக், முன்னாள் தலைவர் சட்டத்தரணி என். எம். சஹீட், அகில இலங்கை வை.எம்.எம். . பேரவையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அம்ஹர் ஷரீப், முன்னாள் தலைவர் கே.என்.டீன்,   முஸ்லிம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அஹ்மத்,  கவனயீர்ப்புப்போராட்ட ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் கலந்து கொண்ட  அலீகான் சரீப். முஹம்மத் சுபியான், மௌலவி  தௌபீக். ராபி மௌலவி, இமாம் இம்தியாஸ் ,முஹம்மத் காமில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்