மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைப்பதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: ஆளுநர் கூறியதாக ஹசன் அலி தெரிவிப்பு

🕔 April 28, 2017

மாணிக்கமடு மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரையொன்றினை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கோ, அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனக்கு எந்த அதிகாரமுமில்லை என, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தன்னிடம் தெரிவித்ததாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

மயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“மாயக்கல்லி மலை பகுதியில் மேற்கொள்ளப்படும் பலவந்தமான காணி சுவீகரிப்பு முயற்சிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் வினவினேன். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தனக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றார்.

அதோடு இவ்விவகாரம் மத்திய அரசாங்கத்துக்குரியதெனவும் மத்திய அரசாங்கமே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

மாயைக்கல் மலை விவகாரம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற  கூட்டத்தில், காணி ஆணையாளர் கலந்து கொண்டமை குறித்து, தனக்குத் தெரியாதெனவும் ஆளுநர் கூறினார். எனவே மத்திய அரசாங்கம்தான் இவ்விவகாரத்துக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் ஆளுநர் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

கிழக்கில் 146  பிரதேசங்கள் தொல் பொருள் பிரதேசங்களாக இனம்காணப்படுள்ளன. மயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைக்கும் முயற்சி வெற்றி பெற்றால் 146 பிரதேசங்களில் சிலைகள் நிறுவுவதும்,  விகாரைகள் அமைப்பதும் ஆரம்பமாகிவிடும்.

மயக்கல்லி மலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரான முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியின் அனுமதியுடனே சிலை நிறுவப்பட்டதாக ஏற்கனெவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முஸ்லிம்களுக்கென்று கிழக்கில் ஓர் அதிகார  மையம் இன்மையே காரணமாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்