நெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிதல்: மு.கா.வின் பாலமுனை அமைப்பாளராக செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவிப்பு

🕔 April 1, 2017

– அஹமட் –

மு.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பிரதேசத்துக்கான அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.

மு.காங்கிரசினுடைய பாலமுனை அமைப்பாளராக செயற்பட்டு வந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், கட்சியில் வகித்து வந்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக, குறித்த உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாலமுனைப் பிரதேசத்தின் அமைப்பாளராக, தானே செயற்படப் போவதாக ஹக்கீம் அறிவித்தார்.

ஏற்கனவே, அன்சிலுக்கும் – ஹக்கீமுக்கும் இடையில் அரசல் புரசலாக முரண்பாடுகள் நிலவி வந்த காலப்பகுதியில், பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக  சென்றிருந்த ஹக்கீம், அங்கு மூக்குடை பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

அந்த நிகழ்வு நடைபெற்ற வேளையில், அங்கு வந்த கட்சி உறுப்பினர் ஒருவர் ஹக்கீமைப் பார்த்து; “இது உண்டியல் மூலம் நிதி சேகரித்து வளர்க்கப்பட்ட கட்சி. உங்களுக்கு முடியா விட்டால், தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அன்சிலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக, பாலமுனையில் ஹக்கீம் கடுமையான எதிர்ப்பின முகம் கொள்வார் என, கட்சிக்குள்ளேயே பேசப்படுகிறது.

பாலமுனை பிரதான வீதியில், அண்மையில் மு.கா. தலைவரின் குற்றங்களை அம்பலப்படுத்தும் வகையில், அன்சில் உரையாற்றிய கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது, அந்தக் கூட்டத்தை கடந்து – பிரதான வீதியினால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் – வாகனத்தில் செல்ல வேண்டியேற்பட்டது. இதன்போது, அங்கு கூடி நின்ற பெருந்திரளான மக்கள், நசீருக்கு எதிராக கூக்குரலிட்டமையும் நினைவு கொள்ளத்தக்கது.

எனவே, அன்சிலுக்கு எதிராக ஹக்கீம் எடுத்துள்ள முடிவுகளால், பாலமுனையில் மு.காங்கிரஸ் பிரமுகர்கள் – கால்  வைக்க முடியாததொரு நிலை உருயுள்ளது என்று கட்சிப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்