ரூபாவாஹினியில் புதிய தமிழ் அலைவரிசை; ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

🕔 January 8, 2017

– அஷ்ரப் ஏ சமத் –

மிழ் பேசும் மக்களுக்காக இலங்கை ரூபவாஹி கூட்டுத்தாபனத்தின் ஊடாக, புதிய தொலைக் காட்சி அலைவரிசையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய நல்லிணக்க அமைச்சர் பல தடவை சுட்டிக் காட்டி வந்த நிலையில், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அனுமதியை ஜனாதிபதி பெற்றுத் தந்துள்ளதோடு, இதற்காக 180 மில்லியன் ரூபாய் நிதியினையும், புதிய அலைவரியும் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய அலைவரிசையினை ஆரம்பிப்பதற்கான கைச்சாத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை ரூபவாஹினி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தேசிய தொலைக்காட்சியான ரூபாவாஹினியில்  3வது அலைவரிசையாக தமிழ் பேசும் 25 வீத மக்களுக்காக ‘நல்லிணக்க அலைவரிசை’ ஒன்றினை ஆரம்பிப்பாதற்காக, ஜனாதிபதியின்  இரண்டாவது ஆண்டு  பதவியேற்பை முன்ணிட்டு இன்று நடவடிக்கைள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த அலைவரிசைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமா்ப்பித்து 180 மில்லியன் ருபா நிதியும் புதிய தொலைத் தொடா்பு (frequency channel )    அலைவரிசையும்   ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் தமிழ் மொழியைப்  பேசும் 25 வீத  தமிழ், முஸ்லீம் மக்களுக்காக ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டு 35 வருடகாலமாகி விட்டது. ஆயினும்,  தமிழ் மொழி மூலம் அவா்களது கலை, கலாச்சார மற்றும் நடப்பு விவகாரங்களை சரியான முறையில் வழங்க தவறிவிட்டது.  இந்த விடயத்தினை கடந்த வருடம்   ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடும்போது கூறினோம். மேலும், இதற்காக புதிய அலைவரிசை ஒன்றின் தேவை குறித்தும் கோரிக்கை முன்வைத்தோம். இதனை உடன் அமுல்படுத்த ஜனாதிபதி உத்தரவிட்டார். அதற்காக, அலைவரிசை  மற்றும் திரைசேரி மூலம்  180 மில்லியன் ரூபாவையும்  ஜனாதிபதி  பெற்றுக் கொடுத்தார்.

நேத்ரா அலைவரிசையில்  கிறிக்கட் மற்றும் வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றமையினால், நேத்ரா அலைவரிசை  ஊடாக உரிய நிகழ்ச்சிகளை  தமிழ் மக்களுக்காக  கொடுக்க முடியவில்லை. எனவே. புதிய ஓர்  அலைவரிசையை ஆரம்பிக்குமாறு அமைச்சா் மனோ கணேசனும் சுட்டிக்காட்டி வந்தாா். அத்துடன்  அவா் கிளிநொச்சியில் ஒரு உப கலையகம் ஒன்றை அமைப்பதற்கும்  அதற்குரிய கட்டிட  வசதிகளையும் பெற்றுத்தருவதற்கும் உறுதியளித்து்ளளாா். அதனையும் உடன் இந்த வருடத்திற்குள் ஆரம்பிக்க முடியும்.  கிளிநொச்சி  மற்றும் யாழ்பாண மக்கள் கொழும்பு வராது.  அங்கிருந்தே தமது ஒளிப்பதிவுகளை செய்யமுடியும்” என்றார்.

புதிய அலைவரிசையை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம், தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளா் சிவஞானஜோதிக்கும் – ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவா் ரவி ஜெயவா்த்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை, ரூபாவாஹினிக் கூட்டுத்தபனம்  மாதாந்தம் 10 மில்லியன் ரூபாவுக்கு அதிகாமாக மின்சாரக் கட்டணத்தினை செலுத்தி வருகின்றது. எனவே, சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இலங்கை மின்சார சபையுடனும், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் இன்றைய தினம் ஒரு ஒப்பந்தத்தினை இன்று செய்து கொண்டது.

இந் நிகழ்வில்  அமைச்சர்களான  கயாந்த கருணாதிலக்க, மனோ கணேசன், ரவி கருநாயக்க, ரஞ்சித் சியாலம்பிட்டிய, பிரதியமைச்சா்களான அஜித் பெரேரா மற்றும் பரனவித்தாரண ஆகியோரும்கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்