ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மண்ணை அகற்றுமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் கோரிக்கை

🕔 November 28, 2016

harees-098– அகமட் எஸ். முகைடீன் –

லுவில் மீன்பிடி துறைமுக படகுப் பாதையை மூடியுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தொடர்பான வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இந்த வேண்டுகோளினை விடுத்தார்.

நாடாளுமன்ற வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் தொடர்ந்தும் பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்;

“துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவின் கவனத்துக்கு ஒலுவில் துறைமுக பிரச்சினையினை கொண்டுவர விரும்புகின்றேன். இது தொடர்பில் இதற்கு முன்னதாகவும் அமைச்சர் மற்றும் துறைமுக பிரதம பொறியியலாளர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறேன்.  ஒலுவில் துறைமுக படகுப் பாதையில் மண் நிரம்பியுள்ளதால் துறைமுகத்தில் தரித்திருக்கும் 650 இக்கும் மேற்பட்ட இயந்திர படகுகள் மீன்பிடி தொழிலை மேற்கொள்வதற்காக கடலுக்குள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் தமது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இதன்காரணமாக இம்மீனவர்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொள்ளவிருந்தனர். ஆனால்,  துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சருடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக அவர்களிடம் வாக்குறுதி அளித்து போராட்டங்கள் இடம்பெறாது தடுத்தோம்.

அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க  சிறந்த செயல்திறன்மிக்கவர். அவருடைய அமைச்சை சிறந்த முறையில் வழிநடத்துகின்றார். எனவே இப்பிரச்சினை மீனவர்களின் ஜீவனோபாயத்துடன் தொடர்புடையது என்பதால், அமைச்சர் மிகுந்த கவனமெடுத்து, குறித்த மண்ணை அகற்றுவதற்கு ஏதுவான இயந்திரத்தை வழங்கி மண் அகற்றும் பணியினை உடன் ஆரம்பிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதேவேளை,  நாடாளுமன்றத்தில் இதன்போது பிரசன்னமாகி இருந்த அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவிடம் எழுத்து மூலமான கோரிக்கையினையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் வழங்கினார்.

இதன்போது, இரண்டு நாட்களுக்குள் மண்யை அகற்றுவதற்கான இயந்திரத்தை வழங்கி, மண்ணகற்றும் பணியினை ஆரம்பிப்பதாக அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க வாக்குறுதியளித்தார்.

Comments