இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

🕔 October 30, 2016

mansoor-0987– றிஜாஸ் அஹமட் –

றக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் ‘இருள் நீக்கி, வெளிச்சம் மிக்க தேசம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், நடமாடும் சேவை நிகழ்வு – இன்று  ஞாயிற்றுக்கிழமை அம்பாறையில் நடைபெற்றது. இதில் மின்சக்தி, எரிபொருள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது, இறக்காமம் பிரதேசத்துக்கான மின்சார சபை துணைக் காரியாலயத்துக்கான கோரிக்கையினை, அமைச்சர் சியம்பலாப்பிட்டியவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியலாளர் மன்சூர் முன்வைத்துப் பேசினார்.

ஏற்கனவே, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், இவ்விடயம் தொடர்பில் தான் பேசியமையினையும் இணைத் தலைவர் மன்சூர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நடமாடும் சேவையில் கலந்துகொண்ட  தனது செயலாளரை சந்திக்குமாறு பொறியியலாளர் மன்சூரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து மின்சக்தி அமைச்சின் செயலாளர் டொக்டர் பதகொடவை சந்தித்து, இணைத் தலைவர் மன்சூர் பேசிய போது, குறித்த துணைக் காரியாலயம் தொடர்பில் தனக்கு இது வரை எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.

இதன்போது, இறக்காமம் பிரதேசத்துக்கு மின்சபையின் துணைக் காரியாலயம் ஒன்றின் தேவை குறித்து விளக்கமளித்த இணைத் தலைவர் மன்சூர், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விபரித்தார்.

இதனையடுத்து, இறக்காமம் பிரதேசத்தில்ட மின்சாரசபையின் துணைக்காரியாலயம் ஒன்றினை அமைப்பதற்கான வேலைகளை எதிர்வரும் 04 மாதங்களுக்குள் நிறைவு செய்து தருவதாக அமைச்சின் செயலாளர் உறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது, கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆலிதீன் அமீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.mansoor-0986

Comments

புதிது பேஸ்புக் பக்கம்