பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 October 30, 2016

hakeem-008– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நொவம்பர் 13, 14 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா தொடர்பில் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு, சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்;

“சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை ஒன்றினை பெற்றெடுப்பதில், என்னுடைய நிலைப்பாடு இதயசுத்தியுடன் இருந்ததா இல்லையா என்பது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு, அமைச்சர் பைசர் முஸ்தபா தகுதியுடயவரா என்ற கேள்வி எனக்குள்ளது.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் பைசர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருந்தார். சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக, நாம் மூன்று முறைகளுக்கு மேல் அவரை சந்தித்திருக்கிறோம். இதன்போது, சந்தர்ப்பம் வரும்போது சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக்கான பிரகடனத்தை செய்வதாக, அவர் எங்களிடம் கூறிவிட்டு, இப்போது இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது  அரசியல் காழ்ப்புணர்வுவின் காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

பைசர் முஸ்தபா உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சராக உள்ளார். எனவே, ஒரு உள்ளுராட்சி சபையை பிரகடனப்படுத்துவதற்கான சகல அதிகாரங்களும் அவரின் கையில் இருக்கிறது. எனவே, அதைச் செய்து விட்டு வந்து, அவர் பேசியிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால், இது விடயாமாக எந்த நடவடிக்கையும் எடுக்காது, இங்கு வந்து என்னை வம்புக்கு இழுத்துவிட்டு சென்றிருப்பது, அவரது பக்குவமில்லாத பண்பைக் காட்டுகிறது.

பைசர் முஸ்தபா ஓர் இளம் அமைச்சர். ஆகையால் அவருடைய கூற்றை நான் பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. அவரின் தகப்பனாரிடத்தில் நான் சட்டம் பயின்றவன். சட்ட உதவியாளராக அவரிடம் வேலை செய்தவன். பைசரின் குழந்தைப்பருவத்தில் இருந்து கையைப்பிடித்து உல்லாசமாக ஓடித்திரிந்தவன். தற்போது அரசியலுக்கு வந்ததன் பின்னர், இந்த அன்னியோன்யம் எல்லாம் மறந்து விட்டது போலும். இருந்தாலும் நான் இந்த விடயத்தில் அவரை புண்படுத்த விரும்பவில்லை.  இந்த விடயத்தில் அவர் பக்குவம் தவறிவிட்டார் என்ற வேதனை எனக்கு உள்ளது” என்றார்.

கடந்த வாரம் சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பைசர் முஸ்தபா; ‘சாய்ந்தமரு பிரதேசத்துக்கான உள்ளுராட்சி சபையொன்றினைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில், அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தன்னிடம் பல தடவை இதய சுத்தியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்ததோடு, இது தொடர்பில் தன்னை வந்து சந்தித்த வேறு சிலர், வெறும் புகைப்பட விளம்பரங்களுக்காகவே சந்தித்தனர்’ என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.hakeem-008

Comments

புதிது பேஸ்புக் பக்கம்