நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – உண்மையை உணர்ந்துக் கொண்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ர்கஷளுக்கு இடையில், எதுவித ரகசிய ஒப்பந்தங்களும் இல்லை எனவும் கோட்டா கூறியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தபாய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கடற்படை அதிகாரிகள் மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்தமை தொடர்பில் அதிருப்தி வெளியிடுவதற்கு முன்னர் தன்னுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில், ஜனாதிபதி உண்மையை உணர்ந்துக் கொண்டமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். இதேபோன்று பல்வேறு நபர்களின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், அவர் நேரடியாக செயற்டுவார் என நான் நினைக்கின்றேன்” என்று கோட்டா கூறினார்.
“எப்படியிருப்பினும் தங்கள் மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளைமையினால் நாட்டில் உள்ள சட்டத்திற்கமைய அதனை விசாரிப்பது பிழையா” என எழுப்பப்பட்ட கேள்விக்கு கோட்டா பதிலளித்தார்.
“எந்தவொரு விசாரணைகளையும் நான் புறக்கணிக்கவில்லை. பல்வேறு நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளும் இந்த விசாரணைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது என்பதை, கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.
தற்போது ஜனாதிபதியும், அந்த விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்” என்றார்.



