ஆயுர்வேத மருத்துவம்: மணக்கத் தொடங்கும் மல்லிகை

🕔 August 11, 2016

Article - Nakfer - 076
– முகம்மது தம்பி மரைக்கார் –

டுத்தவற்றின் மீது ஆர்வம் கொள்வது மனித மனதின் இயல்பாகும். இந்த ஆர்வக் கோளாறினால், நமக்கு வெளியிலுள்ளவற்றினையே எப்போதும் நாம் வியப்போடு பார்க்கிறோம். காலப்போக்கில், நம்மிடமிருப்பவற்றை நாம் புறக்கணித்து விடத் தொடங்குகின்றோம். பின்னொரு காலத்தில், நம்மிடமுள்ளவற்றின் பெருமைகள் குறித்து, அடுத்தவர் பேசும்போதுதான், அவற்றினை நாம் திரும்பிப் பார்க்கத் தொடங்குகின்றோம். தம்பெருமை தெரியாதோரின் நிலை, இதுவாகவே இருக்கிறது.

ஒவ்வொரு சமூகத்துக்கும் தனியான அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு தேசத்துக்கும் பிரத்தியேகமான சிறப்புக்கள் இருக்கின்றன. இவற்றினை இழப்பவர்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதில்லை. அவர்கள் இருந்த தடமின்றித் தொலைந்துபோய் விடுகின்றனர்.

நமக்கான அடையாளங்களில் அதிகமானவற்றினை, நமது பாரம்பரியங்கள் வழியாக நாம் பெற்றுக்கொள்கிறோம். பாரம்பரியம் என்பது, நமது முன்னோர்களிடமிருந்து – தலைமுறைகள் கடந்து நம்மை வந்தடைகின்றவையாகும். நமது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும், நமது முன்னோர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த பாரம்பரிய அடையாளங்களினை நாம் கண்டுகொள்ளலாம். நமது பேச்சுவழக்கு, ஆடை முறைமை, உணவுகள் மற்றும் மருத்துவ முறைகள் என்று, எல்லாவற்றிலும் நமது பாரம்பரிய அடையாளங்கள் உள்ளன.

ஆயுர்வேதம்Article - Nakfer - 074

இவ்வாறு, நம்மிடையேயுள்ள பாரம்பரியங்களில் ஒன்றுதான் ‘ஆயுர்வேதம்’ எனும் மருத்துவ முறையாகும். குறிப்பாகச் சொன்னால், இது – தெற்காசிய நாடுகளுக்கே உரிய பாரம்பரிய மருத்துவ முறையாக உள்ளது. ‘ஆயுர்வேத’ என்பது சமஸ்கிருத சொல்லாகும். ஆயுர் என்றால் நீண்ட ஆயுள் என்று அர்த்தமாகும். வேத என்பது நூல் அல்லது அறிவுத்துறை என்று பொருள்படும். அதாவது, நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்பது இதன் பொருளாகும். ‘ஆயுர்வேத’ என்கிற சமஸ்கிருதச் சொல்லினை, ‘ஆயுள்வேதம்’ என்று தமிழ்படுத்திச் சொல்வார்கள்.

இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம் மிகமுக்கியமானதாகும். அதனால், ஆயுர்வேத மருத்துவத்தினை ‘சுதேச மருத்துவம்’ என்றும் அழைப்பார்கள். ‘சுதேசம்’ என்றால் சொந்த நாடு என்று அர்த்தமாகும். அதாவது, ஆயுர்வேதம் என்பது நமது சொந்த நாட்டு மருத்துவ முறையாகும்.

கட்டுரையின் முதல் பந்தியில் நாம் கூறியிருப்பதுபோல், அடுத்தவற்றின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, நமது சொந்த மருத்துவமான ஆயுர்வேதத்தின் மீது – நமக்கு ஈர்ப்பு இருந்ததில்லை. ஆயுர்வேத மருத்துவத்தினை இளக்காரமாகவே ஒரு காலகட்டத்தில் நாம் பார்த்தோம். நமது முற்றத்தின் மல்லிகை – நமக்கு மணக்கவேயில்லை. ஆனால், இந்த நிலை இப்போது மாறியுள்ளதாகச் சொல்கிறார் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர். அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையானது, கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்றாவது பெரிய ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையாகும்.

ஈர்ப்புArticle - Nakfer - 070

‘ஆயுர்வேத மருத்துவமும், மருந்துகளின் வடிவங்களும், சில காலங்களுக்கு முன்னர் வரை, பாரம்பரிய – பழைய முறைகளைக் கொண்டதாகவே இருந்தன. அதிகமான மருந்துகள் பொடியாகவும், தூள் வடித்திலும் நேரடியாக வழங்கப்பட்டன. இந்த மருந்துகள் அதிக கசப்பும், மணமும் கொண்டவையாகும். அதனால், இவற்றினை உட்கொள்ளும் அச்சம் காரணமாகவே, ஆயுர்வேத மருந்துகளை அதிகமானோர் விரும்பவில்லை. ஆனால், இந்த நிலை இப்போது மாறி விட்டது. கடந்த 05 ஆண்டுகளில் ஆயுர்வேத மருந்துகள் நவீன முறையில், ஆங்கில மருந்துகளுக்கு ஒப்பான வடிவில் குளிசைகளாகத் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்தும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆயுர்வேத மருந்துகளை நாம் இறக்குமதி செய்கின்றோம். இப்போதெல்லாம் நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமான, வெளிநோயாளர்கள் எமது வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு வெளியூர்களிலிருந்தும் நோயாளர்கள் வருகின்றார்கள்’ என்று டொக்டர் நக்பர் விபரித்தார்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1977ஆம் ஆண்டில் இலங்கையில் ஆயுர்வேத வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகம் என, மொத்தமாக 10 மட்டுமே இருந்தன. இப்போது இவற்றின் தொகை 270 ஆக அதிகரிதுள்ளது. நாடு முழுவதும் 62 ஆயுர்வேத வைத்தியசாலைகளும், 208 மத்திய மருந்தகங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் இங்கு சிகிச்சைகளுக்காக வருகின்றனர். அதாவது, இலங்கையிலுள்ள மொத்த சத்தொகையில் 11 வீதமானோர் – அரசினர் ஆயுர்வேத வைத்திசாலைகளை நாடி வருகின்றனர் என்று சுதேச மருத்துவத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

ஆயுர்வேத மருத்துவத்துறை மீதான ஈடுபாடு, இப்போது மக்களிடம் மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்மையினை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பக்கவாதம், பாரிசவாதம், மூட்டுவலி, தோல்நோய், சளி, பீனிசம், மூல வியாதி மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத வைத்தியத்தில் அதிக பலன் கிடைத்து வருகின்றமை உணரப்பட்டுள்ளது. அதனால், ஆயுர்வேத மருத்துவத்துறையினை இளக்காரமாகப் பார்த்தவர்கள், இன்று அதன் பயனை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

‘ஆயுர்வேத மருத்துவத்தில், நோயைத் தீர்க்க நீண்ட காலம் எடுக்கிறது எனும் மனச்சோர்வு மக்களிடம் உள்ளது. இதில் உண்மைகளும் இல்லாமலில்லை. ஏன் இப்படி’ என்று டொக்டர் நக்பரிடம் கேட்டோம்.

‘ஆயுர்வேத மருத்துவத்தில் நோயை மட்டும் நாம் தீர்ப்பதில்லை. அதற்கான காரணிகளையும் கண்டறிந்து, அவற்றுக்கும் சேர்த்தே சிகிச்சையளிக்கின்றோம். அதற்காக குறிப்பிட்டதொரு காலத்துக்கு மருந்துகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. மட்டுமன்றி, எம்மிடம் சிகிச்சைக்காக வருகின்றவர்களில் கணிசமானவர்கள், வேறு வைத்தியங்களைப் பெற்றுக் கொண்ட நிலையில், நோய் தீராமல் – அதன் வீரியம் அதிகரித்த நிலையில்தான் எம்மிடம் வந்து சேர்கின்றார்கள். அவ்வாறானவர்களை சுகப்படுத்துவதற்கு சற்று காலம் எடுப்பது தவிர்க்க முடியாதது. அதனால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக காலம் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர்’ என்று டொக்டர் நக்பர் விளக்கமளித்தார்.

டொக்டர் நக்பர்
Article - Nakfer - 071
கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத யூனானி மருத்துவத்துறையில் சிறப்புப்பட்டம் பெற்றுள்ள டொக்டர் நக்பர், ஆயுர்வேத அரச மருத்துவத்துறையில் 10 வருட கால அனுபவத்தைக் கொண்டவர். ஆயுர்வேத வைத்தியசாலை நிருவாக முகாமைத்துவத்தில், சில மாதங்களுக்கு முன்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டம் பெற்றார். மேற்படி துறையில், இலங்கையில் இந்தப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது முஸ்லிம் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இவர் வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றுகின்றார். அதேவேளை, நிந்தவூரில் அமைக்கப்பட்டுள்ள தொற்றா நோய்களுக்கான அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.

‘சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவமும், நவீன மருத்துவ உபகரணங்கள் பாவனையும்’ எனும் தலைப்பில், கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற பயிலரங்கில் டொக்டர் நக்பர் கலந்து கொண்டார். இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 42 பேர் கலந்து கொண்டனர். இலங்கையிலிருந்து 05 பேர் சென்றிருந்தனர்.

சேவைகள்

இலங்கையில் ஆயுர்வேத மருத்துவத்தினை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு, அரசாங்கம் பல்வேறு வகைகளில் செயற்பட்டு வருகின்றது. உதாரணமாக, மாகாண சுகாதார அமைச்சின் கீழ் – மத்திய மருந்தகம், கிராமிய வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலை, மாகாண வைத்தியசாலை மற்றும் போதனா வைத்தியசாலை ஆகியவை, ஆயுர்வேத துறையில் நிறுவப்பட்டு மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் கீழ் – ஆயுர்வேத வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை, ஆராய்ச்சி வைத்தியசாலை மற்றும் தொற்றா நோய்களுக்கான ஆராய்ச்சி வைத்தியசாலைகள் என்பன உருவாக்கப்பட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையில் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர, நாடு முழுவதும் உள்ளுராட்சி திணைக்களங்களினால் 230 வைத்திய நிலையங்கள் நிருவகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமும் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதிலுமுள்ள அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலைகளில் 1424 வைத்தியர்கள் சேவையற்றுகின்றனர் என்று, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம்

ஆயுர்வேத மருத்துவத்தினை ஒரு துறையாக வளர்த்தெடுக்கும் பொருட்டு, அதற்கென சட்டம் உருவாக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் மூலம், இலங்கையின் சுதேச மருத்துவத்துறைக்கான அங்கீகாரம் கிடைத்தது.

இது மட்டுமன்றி, இலங்கையில் ஆயுர்வேத மருத்துவத்துறையில் பட்டப்படிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிணங்க, 1977 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக ஆயுர்வேத மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம், களனி மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான பீடங்கள் உருவாக்கப்பட்டன.

குறைபாடுகள்

ஆயுர்வேத மருத்துவம் மீது தற்போது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள போதும், இந்தத் துறையானது பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளமை குறித்தும் பேசவேண்டியுள்ளது.

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் நவீன வைத்திய உபகரணங்கள் எவையும் இல்லை என்பது பாரியதொரு குறைபாடாகும். உதாரணமாக, எக்ஸ்ரே மற்றும் ஈசிஜி போன்ற இயந்திரங்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், ஆய்வுகூட வசதிகளும் இங்கு இல்லை.

எலும்பு முறிவுக்காக சிகிச்சை பெறுவதற்கு ஆயுர்வேத வைத்தியசாலையொன்றுக்கு நோயாளியொருவர் வரும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு தொடர்பில் எக்ரே படம் ஒன்றினை எடுத்துப் பார்ப்பதற்கான வசதிகள் எவையும், ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இல்லை. குறித்த நோயாளியினை எக்ஸ்ரே இயந்திரமுள்ள ஆங்கில வைத்தியசாலையொன்றுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு, ஆங்கில வைத்திசாலைக்குச் செல்லும் நோயாளியொருவர் மீண்டும், ஆயுர்வேத வைத்தியசாலைக்குத் திரும்பி வந்து சிகிச்சை பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகும்.

ஆனால் – சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில், இவ்வாறான நவீன வசதிகள் உள்ளன என்று டொக்டர் நக்பர் தெரிவிக்கின்றார். மேற்படி நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் ஆயுர்வேத மருத்துவத்துறையானது, நவீன முறையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார்.

நம்பிக்கை

எவ்வாறாயினும், ஆயுர்வேத மருத்துவத்துறை தொடர்பில் மக்களிடமிருந்த இளக்காரமான பார்வையும், அவநம்பிக்கைகளும் இப்போது இல்லாமல் போகத் தொடங்கியுள்ளன. ஆயுர்வேத மருத்துவம் பற்றிய புரிதல்களும், தெளிவுகளும் மக்களிடம் ஏற்பட்டு வருகின்றன. இவை நல்ல மாற்றங்களாகும்.

இந்தக் கட்டுரைக்காக, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கு, வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நக்பரை நாம் சந்திக்கச் சென்றிருந்தபோது, அங்கு 10 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் சென்ற சிங்கள சகோதரர் ஒருவரிடம் பேசினோம். அவர் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் – அரசாங்க உத்தியோகத்தர். இடுப்பு வலி மற்றும் முழங்கால் மூட்டுக்களை அசைக்க முடியாததால், நடக்க முடியாத நிலையில் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தார். நம்முடன் பேசியபோது அவரின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி தெரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நடக்க முடியாமல் இருந்ததாகக் கூறிய அவர், தனது கால்களை சந்தோசத்துடன் மடித்து, நிமிர்த்திக் காட்டினார். தனக்கு மருத்துவம் செய்த வைத்தியரை கையெடுத்துக் கும்பிட்டுச் சென்றார்.

ஆயுர்வேத மருத்துவம் என்கிற முற்றத்து மல்லிகை, நமக்கு மணக்கத் தொடங்கியுள்ளதை நேரடியாகக் காணக் கிடைத்தது.

நன்றி: தமிழ் மிரர் (11 ஓகஸ்ட் 2016)05 04 03 01 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்