மு.காங்கிரஸ் திசை மாறிப் பயணிக்கிறது; தலைவர் உள்ளிட்டோருக்கு, ஹனீபா மதனி கடிதம்

🕔 July 20, 2016

Haniffa Mathani - 09923
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரசைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப்பின்  நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று, அந்தக் கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை – அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையிலான அனைவரும் மிகக் கவலையுடன் நோக்குவதாக, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசனலி ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே, மேற்கண்ட விடயத்தை ஹனீபா மதனி குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

அண்மைக்காலமாக நமது கட்சி தொடர்பாக உங்களுக்கிடையே உருவாகியுள்ள கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து விஸ்வரூபமாகி முற்றி முறுகிப்போயிருக்கும் இன்றைய நிலையில் இப்பகிரங்கக் கடிதத்தை மிகக் கவலையுடன் வரைகின்றேன்.

உங்களுக்கிடையிலான இந்தக் கருத்துவேறுபாடுகள் துளிர்விட ஆரம்பித்த வேளையிலேயே இவ்வாறான கருத்து முரண்பாடுகளை நீங்கள் மூவருமாக மனந்திறந்து பேசி முடியுமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்து உங்களுக்குள் தீர்த்துக் கொள்ளுமாறு நான் எனது ஆலோசனையை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் தெரிவித்திருந்தேன்.

எனினும், எனது வேண்டுகோள் தொடர்பில் நீங்கள் மூவருமே உரிய கவனத்தைச் செலுத்தி முஸ்லிம் சமூகத்தினதும், நமது கட்சியினதும் நலன்களைப் பேணிச் செயலாற்ற முன்வராததால் இன்று கட்டுமீறிய நிலைக்கு இந்த விவகாரம் சென்றிருப்பதை கட்சியின் பற்றாளன் என்ற வகையில் நான் மிக மனக்கிலேசத்துடன் நோக்கியவனாக இத்திறந்த மடலை வரையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளேன்.

உங்கள் எல்லோரையும் விட, உங்களின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்வோர் உங்களுக்கிடையில் எழுந்திருக்கின்ற இக்கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து பரஸ்பரம் வெளியிடப்பட்டு வருகின்ற மாற்றுக் கருத்துக்களும், பதில் குற்றச்சாட்டுக்களுமானது – கட்சிப் போராளிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களிடையே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை நான் இவ்விடத்தில் மறைக்காமல் சுட்டிக்காட்டியாக வேண்டும். மாத்திரமல்லாது, எதிர் அரசியல் முகாம்களைச் சேர்ந்தோரிடமும், இந்நாட்டில் வாழுகின்ற சகோதர சமூகத்தினரிடமும், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகளிடமும் இக்கட்சியின் மீது இதுகால வரைக்கும் கட்டியெழுப்பப்பட்டிருந்த அபாரமான நம்பிக்கையையும், நன்மதிப்பையும் வெகுவாகச் சிதைவடையச் செய்யும் வகையில் விரிவடைந்திருப்பது நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இக்கட்சியைத் தோற்றுவித்த ஸ்தாபகப் பெருந்தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நல்லெண்ணங்களுக்கும், உயர் இலட்சியங்களுக்கும் முற்றிலும் முரணான வகையில் இன்று நமது கட்சி தடம்புரண்டு, திசை மாறிப் பயணிப்பதை அடிமட்டப் போராளிகள் முதற்கொண்டு உயர்பீட உறுப்பினர்கள் வரையான அனைவராலும் மிகக் கவலையுடன் நோக்கப்படுகின்றது.

கடந்த 2000ஆம் ஆண்டு நமது ஸ்தாபகப் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்த பின் இற்றை வரைக்கும் இந்த சமூக அரசியல் இயக்கத்தை தமது தோளிலும், சிரசிலுமாகச் சுமந்து கொண்டு இந்த முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தி வந்துள்ள நீங்கள், இடையில் எழுந்த எத்தனையோ சிக்கல் நிறைந்த பிரச்சினைகளை எல்லாம் ஒன்றுபட்டு, ஓரணியில் நின்று வெற்றிகொண்டு வந்துள்ள வரலாறுகளுக்கு மத்தியில், இப்போது உங்களுக்கிடையில் எழுந்திருக்கின்ற இக்கருத்து முரண்பாட்டினை மட்டும் உங்களுக்குள்ளாக நீங்கள் உள்ளகத் தளத்தில் நின்று பேசித் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் பகிரங்கப் பொதுவெளியில் பலரும் விமர்சிக்கும் அளவுக்கு இவ்விடயத்தை வேலி தாண்ட விட்டிருப்பது ஆழ்ந்த கவலையைத் தருவதாக அமைந்துள்ளது என்பதையும் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

அண்மைக்காலமாக உங்களின் ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொள்வோர் மாறி மாறி ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வரும் கருத்துக்களும், அறிக்கைகளும் மிகவும் கீழ்மட்ட நிலையுடைய வசைபாடல்களாக இன்று பலராலும் கருதப்படும் அளவுக்கு தரந்தாழ்ந்து காணப்படுகின்றதே அன்றி, அவற்றில் உங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தடுத்து, இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இக்கட்சியைப் பாதுகாக்கின்ற, நல்லாட்சி வழியில் தூய்மைப்படுத்துகின்ற, சீரான நிர்வாகக் கட்டமைப்புக்குள் மீளமைக்கின்ற எந்தவொரு உருப்படியான விடயங்களையும் காண முடியாதுள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்களான உங்கள் தரப்பு ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்வோர் இன்று வெளிப்படையாகத் தெரிவித்து வரும் மட்டகரமான குற்றச்சாட்டுக்களால் கட்சியின் ஆணி வேராக விளங்குகின்ற போராளிகள் ஆட்டங்கண்டுள்ளனர். தொடர்ந்து என்ன செய்வதென்று அறியாது அவதிப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இக்கட்சியைப் பாதுகாப்பதிலும், பலப்படுத்துவதிலும் கிராமக் களங்களில் நின்று செயற்பட்டு எதிர் அரசியலாளர்களின் விமர்சனங்களுக்கும், அடாவடித்தனங்களுக்கும், அளவு கடந்த வன்முறைகளுக்கும் துணிகரமாக முகங்கொடுத்து தமதுயிரையும் துச்சமாக மதித்து பதிலடிகள் வழங்கி கட்சியைப் பாதுகாத்து வந்த போராளிகள், இன்று தலைவர்களே தமக்குள் குடுமிச்சண்டை பிடித்துக் கொண்டும், அசிங்கமான குற்றச்சாட்டுக்களை மாறி மாறி வாரி இறைத்துக் கொண்டும் இருப்பதன் காரணமாக தாம் கால் பதித்து நின்ற உள்ளுர் சமூகக் களத்தை விட்டும் அவமானம் தாங்க முடியாமல் செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருப்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

குர்ஆன் ஹதீஸின் அடிப்படையிலான யாப்பைக் கொண்டுள்ள நமது கட்சியின் முதன்மைப் பிரதானிகளான நீங்கள் மூவருமே, இஸ்லாமிய வரலாற்றில் முரண்பாடுகளுக்கும், போராட்டங்களுக்கும் தீர்வான ஒரு அழகிய முன்னுதாரணமாக இன்று வரை முஸ்லிம் அல்லாத அரசியல் இராஜதந்திரிகளாலும் சுட்டிக்காட்டப்பட்டு வரும் ‘ஹுதைபிய்யா’ உடன்படிக்கையின் உள்ளார்த்தத்தை முழுவதுவமாகப் புரிந்து கொள்ளாமல் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டு பிரிந்து நிற்பதும் கவலைக்குரியதாகும்.

தாம் பிறந்து வளர்ந்த தாயக மண்ணான புனித மக்காவில் அமைந்திருக்கும் இறை இல்லமான ‘கஃபத்துல்லாவை’ வழிபடுவதானது தமது பிறப்புரிமையாகும். அதனை விட்டுக் கொடுக்க முடியாது என நாயகத் தோழர்கள் உறைவாள்களை உருவியவாறு உணர்ச்சி பொங்க எழுந்து நின்ற வேளையிலும், அண்ணல் நபியவர்கள் குறைஷிக் காபிர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இந்த உலகப்புகழ் வாய்ந்த தியாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டும், கஃபதுல்லாஹ்வைத் தவாபு செய்யாமல் மீண்டும் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றதுமே ஒப்பற்ற தலைமைத்துவத்திற்கும், பின்னாள் வெற்றிக்கும் உலக முடிவு வரைக்குமான முன்னுதாரணச் செயற்பாடாகும்.

எனவே, கட்சியைப் பாதுகாப்பதிலும், கட்சியைத் தூய்மைப்படுத்துவதிலும், கட்சியை சிறந்த நிர்வாகச் செயற்பாட்டில் வழிநடாத்துவதிலும் இதுவரை காலமும் பல்வேறு தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்து அக்கறை செலுத்திய நீங்கள், உடனடியாகவே உங்களது சமகாலச் செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொண்டு, மனந்திறந்த கலந்துரையாடல் மூலம் உங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து முடிவுக்குக் கொண்டு வருவதுடன், மீண்டும் இக்கட்சியையும், கட்சிக்காக அன்னாள் முதல் இந்நாள் வரை பாடுபட்டு உழைத்து வரும் மக்களையும் கௌரவமான வழியில் வழிநடாத்திச் செல்வதற்கு முன்வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வினயமாக வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்