வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக் கூடும்; வபா பாறூக்
🕔 July 20, 2016
– முன்ஸிப் அஹமட் –
பணத்தைப் பெற்றுக் கொண்டு 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு முஸ்லிம் தலைமைகள் ஆதரவு வழங்கினார்கள் என்று கூறப்படுகிறதோ, அதுபோல் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விடயத்திலும் முஸ்லிம் தலைமைகள் விலைபோய் விடக்கூடும் என்கிற அச்சம் காணப்படுவதாக கிழக்கின் எழுச்சியின் தலைவர் வபா பாறூக் தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, எந்தக் காரணத்தைக் கொண்டும் நடந்து விடக்கூடாது என்பதை தாம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கின் எழுச்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஹுர் இஸ்ஸதீன், மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் புதல்வர் அலி சப்றி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு எழுச்சியின் தலைவர் வபா பாறூக் அங்கு மேலும் கூறுகையில்;
“இதுவரையில் இரண்டு கிழக்கின் எழுச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவது கிழக்கின் எழுச்சியின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் எனும் முஸ்லிம்களுக்கான அரசியல் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டோம். இரண்டாவது எழுச்சியின் மூலம் முஸ்லிம் காங்கிரசை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.
முதலாவது கிழக்கின் எழுச்சி மூலம் நாம் பெற்றுக் கொண்ட அடையாளம், எமது கையை விட்டுப் போய்விட்டது.
முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்குக்கு வெளியே இருக்கக் கூடாதா என்கிற கேள்வியொன்று உள்ளது. எல்லாவிதமான சரி – பிழைகளுக்கும், அனுபவங்களை வைத்தே பதிலளிக்கப்படுகின்றன. அஸ்ரப் என்கிற கிழக்கின் தலைமையை முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தில் அமர்த்திப் பார்த்தோம். அந்தத் தலைமைத்துவத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுப்புகள் எப்படியிருந்தன என்று நமக்குத் தெரியும்.
அதன்பிறகு, கிழக்குக்கு வெளியிலுள்ள ரஊப் ஹக்கீம் என்பவரை மு.கா.வின் தலைவராக 16 வருடங்களாக வைத்துப் பார்த்துள்ளோம். இந்த அனுபவத்தினூடாக நாம் அறிந்து கொண்டது என்னவென்றால்; கிழக்கு மண்ணிலுள்ள ஒரு தலைமைத்துவத்தினால் மட்டும்தான் முஸ்லிம் காங்கிரசின் நோக்கத்தினை அடைய முடியும். இல்லாவிட்டால், இப்போதுள்ளது போன்ற தலைமைத்துவங்கள் தம்முடைய சுய தேவைகளை மட்டுமே அடைந்து கொள்ளும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கான முனைப்புகள் பல பக்கங்களிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ மக்கள் முன், இந்த அரசு – ஒரு தீர்வுத் திட்டத்தினை வைக்க வேண்டியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான ஆதரவினை முஸ்லிம்கள் வழங்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கேட்கின்றார். அப்படி ஆதரவு வழங்கினால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று கூறுகின்ற நிலைக்கும் அவர் வந்துள்ளார்.
வடக்கு – கிழக்கு இணைப்புக்காக அரசியல் தலைவர்களின் ஆதரவு தேவைப்படும். அதன்போது, முஸ்லிம் தலைமைகளின் ஆதரவும் அவசியப்படும்.
தற்போது நாம் கவனிப்போமாயின் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பு எனும் கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் முஸ்லிம் தலைமைகளின் தரப்பிலிருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனூடாக, வழக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவாக உள்ளார்கள் என்கிற நிலைமை உருவாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
18ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக முஸ்லிம் தலைமைகள் பணத்தினை வாங்கிக் கொண்டார்கள் என்று கூறப்படுகின்றமையைப் போல், வடக்கு – கிழக்கு இணைப்புக்காகவும், முஸ்லிம் தலைமைகள் விலைபோகக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு – கிழக்கு இணைப்பானது எந்தக் காரணத்தைக் கொண்டும் நடந்து விடக்கூடாது என்பதை, தெளிவாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்” என்றார்.