எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்ப்பதற்கு முன்னதாக, கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் இருவரையும் மீண்டும் கட்சியின் அரசியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் உள்ளக முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஹசனலி மேலும் கூறுகையில்;
“கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து, சதி செய்ததாக குற்றம் சுமத்தி இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மௌலவிகள் ஏ.எல்.எம். கலீல், எச்.எம்.எம். இல்யாஸ் ஆகிய இருவரும் சதி எதனையும் செய்யவில்லை. அவர்கள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தவறாகும்.
கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியுமென ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன் என்றாலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இக் குழுவிடம் உண்மை நிலையினை விளக்கக் கூடியதாக இருக்கும்” என்றார்.
கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலி ருந்தும் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மௌலவிகள் ஏ.எல்.எம். கலீல், எச்.எம்.எம். இல்யாஸ் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குழுவில் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களான யூ.எல்.எம்.என். முபீன், கே.எம்.ஏ. ஜவாட், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிணங்கள பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.