புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல்

🕔 April 11, 2016

LTTE - Cap - 01புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பு நரேஹேன்பிட்டி பகுதியிலுள்ள விரைவு தபால் தலைமையகத்தில் வைத்து, லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது, மேற்படி தொப்பி மீட்கப்பட்டது.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்; “கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் புதுக்கடை 03ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டதாகவும் கூறினார்.

கடந்த வாரம் நாரஹேன்பிட்டியில் தலைமையகத்தைக் கொண்ட விரைவுத் தபால் நிறுவனம் ஒன்றுக்கு, லண்டன் நோக்கி அனுப்ப பொதியொன்று வந்துள்ளது. காட் போர்ட் பெட்டியினாலான அந்த பொதியில் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால், அதனைப் பிரித்து அந்த நிறுவனம் சோதனை செய்துள்ளது.

இதன்போது புலிகளின் தொப்பியொன்று அந்தப் பொதியில் இருந்தமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பமாகின. குறித்த பொதியானது  விரைவுத் தபால் நிறுவனத்தின் வவுனியா கிளையில் இருந்து கொண்டு வரப்பட்டு, முகத்துவாரத்திலிருந்தே நாரஹேன்பிட்டி தலைமையகத்துக்கு அனுப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா சென்ற விஷேட பொலிஸ் குழுவொன்று கடந்த வாரம் வவுனியாவில் ஒருவரை  கைது செய்துள்ளனர். அதனையடுத்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, வவுனியா – பூவரசங்குளத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த பொதியானது லண்டனில் உள்ள இலங்கையரான ஒருவருக்கு அனுப்பட இருந்தமையும், சந்தேக நபர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த தொப்பியானது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்