
சிறுபோக நெல் கொள்முதல் திட்டம் தொடங்கியதிலிருந்து 305 மெட்ரிக் டொன் நெல்லினை கொள்முதல் செய்துள்ளதாக, நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.
ஜூலை 13 முதல் ஜூலை 17 வரையிலான நான்கு நாட்களில், இந்த மொத்த அளவும் கொள்முதல் செய்யப்பட்டதாக சபை தலைவர் மஞ்சுல பின்னலந்த தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிகளவிலான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்தும் கணிசமான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிறு போக நெல் கொள்முதல் திட்டம் ஜூலை 13 அன்று தொடங்கியது.
கொள்முதலை எளிதாக்கும் வகையில், முக்கிய அறுவடைப் பகுதிகளில் நெல் சேமிப்புக் களஞ்சியங்களை சபை திறந்துள்ளது.
நாடு நெல் கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 120, சம்பா நெல் கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 130 மற்றும் கீரி சம்பா நெல் கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 140 என, நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலைகளை சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட விலை நிர்ணயத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 143 நெல் சேமிப்புக் களஞ்சியங்களில் தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகத் சபை தலைவர் மஞ்சுல பின்னலந்த மேலும் தெரிவித்தார்.



