தலைப்புச் செய்திகள்

கையில் துப்பாக்கி வைத்திருக்கும் படம் போட்டு,”இனி நல்லவனெல்லாம் கிடையாது” என, ஈரானை மிரட்டுகிறார் ட்ரம்ப்

”இனி நல்லவனெல்லாம் கிடையாது. ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் ரூத் சோசியல் தளத்தில் AI-இனால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை வெளியிட்டு, மேற்படி மிரட்டலை அவர் விடுத்துள்ளார்.

அந்தப் படத்தில் ட்ரம்ப் ஒரு துப்பாக்கியை ஏந்தியிருக்கிறார். பின்னால் மலைகளின் சரிவில் குண்டுகள் வெடிக்கின்றன.

அந்தப் படத்தின் மேலே, ‘ஈரான் சுதாரித்துக்கொள்ளவில்லை. அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும்’ என, ட்ரம்ப் எழுதியுள்ளார்.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்தையைத் தொடங்குவதென்றால், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகையை நீக்க வேண்டும் என்றும், அணு ஆயுதம் தொடர்பான பேச்சுக்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் எனவும் ஈரான் முன்மொழிவொன்றை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.

ஆனால், அதனை ட்ரம்ப் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே, தனது சமூக வளைத்தளத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.