தலைப்புச் செய்திகள்

நான்கு வாரங்கள் போர் நீடிக்கும்; என்ன வேண்டுமானாலும் செய்வோம்: ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 787 ஆக உயர்ந்துள்ளதாக ஈரானிய செம்பிறைச் சங்கத்தை மேற்கோள் காட்டி அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரச ஒளிபரப்பாளரைத் தாக்குவது உட்பட, தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. தெற்கு லெபனானில் புதிய தரைவழி ஊடுருவலைத் தொடங்கியதாகவும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்த அளவிலான தீ மற்றும் சிறிய சேதம் ஏற்பட்டதாக சஊஏதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். தெஹ்ரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை அழிக்க – தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளைகுடா முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்பை ஈரான் தாக்கியுள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. கத்தாரின் அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனம் அதன் இரண்டு எரிபொருள் இடங்கள் தாக்கப்பட்ட பின்னர் அனைத்து உற்பத்தியையும் நிறுத்தியுள்ளது.

உலகின் எண்ணெய் நுகர்வில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் ஜலசந்தி இப்போது மூடப்பட்டுள்ளது என்று ஈரானின் புரட்சிகர காவல்படை கூறுகிறது. மேலும் இந்த நீர்வழி வழியாக செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பல்களும் தாக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

ஈரான் தாக்கியதில் சனிக்கிழமை முதல் இஸ்ரேலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.