தலைப்புச் செய்திகள்

வசந்தம் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாக இர்பான் மீண்டும் நியமனம்: அரசியல் பழிவாங்கலின் பின்னர் இரட்டைப் பதவி

வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திப் பிரிவின் முகாமையாளராக முன்னர் பணியாற்றிய எம்.எஸ்.எம். இர்பான் – மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பிரிவின் பதில் முகாமையாளராகப் பணியாற்றி வந்த நிலையில், வசந்தம் செய்திப் பிரிவின் முகாமையாளராகவும் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வசந்தம் செய்திப் பிரிவில் நிறைவேற்றுத் தர தயாரிப்பாளராக 17 வருடங்களுக்கு முன்னர் இர்பான் நியமனம் பெற்றார். அப்போது அந்தப் பதவியே அங்கு உயர்ந்த பதவியாக இருந்தது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு – கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், இர்பான் அரசியல் பழிவாங்கலுக்குள்ளானார். அதன் காரணமாக, அவர் எந்தவித பொறுப்பும் வழங்கப்படாமல் இரண்டு வருடங்கள் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இர்பானுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீண்ட விசாரணைகள் நடந்தன. இறுதியில் – அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, அவர் முன்னர் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பதவியை வகிக்குமாறு பலமுறை கோரப்பட்ட போதும், அதனை அவர் மறுத்து வந்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சிப் பிரிவுக்கு இர்பான் மாற்றப்பட்டார். பின்னர் நிகழ்ச்சிப் பிரிவின் பதில் முகாமையாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, வசந்தம் செய்திப் பிரிவின் முகாமையாளராக இர்பான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தித்துறையில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட இர்பான், செய்திகள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வந்தம் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்புகளைப் பெற்றிருந்தன.

வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒரே தடவையில் இர்பான் தொகுத்து வழங்கும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியும் அதனை அவர் வழங்கும் விதமும் பலரின் பாராட்டுதலைப் பெற்றது.

இர்பான் – தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் செய்திகளுக்காக ஜனாதிபதி விருதுகளையும், தேசிய ரீதியில் பல விருதுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிட்டது.

கோட்டாவின் பதவிக் காலத்தில் – வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை