
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய புலஸ்தினி மகேந்திரன் அல்லது சாரா ஜாஸ்மின் என்பவர், விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்களின் அடிப்படையில் மரணமடையவில்லை எனத் தெரிகிறது என்று, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால; சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கூறினார்.
தேவைப்பட்டால், சாரா ஜாஸ்மினுக்கு எதிராக பிடியாணை பெறுவதற்கு அரசு முயற்சிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“விசாரணைகள் தொடர்கின்றன. சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்குப் பின்னால் சதித்திட்டம் உள்ளதா என்பதைக் கண்டறிய, புதிய அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இது ஒரு ஆழமான விசாரணை. அது தொடர்கிறது” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.
விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் சில தகவல்களை நாடாளுமன்றத்தில் வெளியிட முடியாத எனவும் அவர் குறிப்பிட்டார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருதுவில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சாரா ஜாஸ்மின் குறித்து – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயங்களைத் தெரிவித்தார்.


