அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

🕔 February 29, 2016

Uthumalebbe - 098
கி
ழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார்.

தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், அக்கரைப்பற்று பிரதேச கல்வி விடயங்களில் தன்னை தலையிடக் கூடாது என்று மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறப்பினர் உதுமாலெப்பை மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின் அக்கரைப்பற்று அஸ் ஸிறாஜ் மகா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் என்பவருக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் பல்வேறு கஸ்டங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இதன்காரணமாக, மன உளைச்சலுக்குள்ளான நிலையில் அதிபர் உவைஸ் அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலிருந்து, வேறு பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றம் வழங்குமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் 80 பேர் இணைந்து கையொப்பமிட்டு, அதிபர் உவைஸ் தொடர்ந்தும் அஸ் ஸிறாஜ் வித்தியாலயத்தில்தான் அதிபராக கடமையாற்ற வேண்டும் எனக் கோரி, அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, தனது இடமாற்றக் கோரிக்கைக் கடிதத்தினை அதிபர் உவைஸ் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும், அமைச்சர் ரஊப் ஹக்கீம் இவ் அதிபரை இடமாற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், தன்னை இப்பாடசாலை அதிபர் பதவியிலிருந்து இடமாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ச்சியாக தொந்தரவுகளை கொடுத்து வந்ததாகவும், அதனால் மன உளைச்சலுக்குள்ளான நிலையில் தனது சுய கௌரவத்தினையும், தனிப்பட்ட பாதுகாப்பினையும் கருத்திற் கொண்டு, அஸ் ஸிறாஜ் வித்தியாலய அதிபர் பதவியில் இருந்து இடமாற்றம் கோரி வலயக் கல்வி பணிப்பாளருக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அதிபர் உவைஸ் எழுத்து மூலம் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானியை கல்வி அமைச்சில் சந்தித்த அக்கரைப்பற்று பிரமுகர்கள், இக் கல்லூரி அதிபரை இடமாற்ற மேற்கொள்ளப்படும் அரசியல் பின்னணிகளை விளங்கப்படுத்தினார்கள்.

இதனையடுத்து, அரசியல் காரணங்களுக்காக அதிபர்கள் இடமாற்றப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சரும் வாக்குறுதி அளித்தார். உரிய அதிகாரிகளையும் இது விடயமாக பணித்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகள் சிலவற்றில் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதால், கல்வி வளர்ச்சியில் பாரிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக, அண்மையில் அக்கரைப்பற்று பிரமுகர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டோவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இத்தனை நிலைமையும் ஏற்பட்ட பின், அக்கரைப்பற்று கல்வி விடயமாக என்னை தலையிடக் கூடாது என மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியுள்ளார்.

அக்கரைப்பற்று மக்களினால் எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அதிகாரம் இருக்கும் வரை, அம்மக்களின் குரலாகவே நான் செயல்படுவேன் என்பதனை மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்