
பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் 2024ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் தொடக்கம், மொத்தம் 2,183 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்ட, தேசிய பெண்கள் குழுவின் கீழ் இயங்கும் 1938 கட்டணமில்லா – பெண்கள் உதவி எண் மூலம் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில், அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் வீட்டு வன்முறை (1,488) தொடர்பானவை.
கூடுதலாக, 234 முறைப்பாடுகள் சைபர் குற்றம் தொடர்பானவையாகும். மேலும் 07 முறைப்பாடுகள் – பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் தேசிய பெண்கள் குழு ஆகியவை, அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பங்களிப்புடன், ஏற்கனவே 24 மணி நேரமும் செயல்படும் 1938 கட்டணமில்லா – பெண்கள் உதவி எண்ணை விளம்பரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்த முயற்சி பாலினம் மற்றும் சமூக விதிமுறைகளின் அடிப்படையில் முறைப்பாடு செய்வதை ஊக்குவித்தல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், நொவம்பர் 25 ஆம் திகதி – பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தைக் குறிக்கும் வகையில், பாலின அடிப்படையிலான வன்முறையை நிவர்த்தி செய்வதற்கும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் 16 நாள் தேசிய திட்டம் நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.


