தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவராக, ஓய்வு பெற்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சரீப் தெரிவு

– றிசாத் ஏ காதர் –

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அம்பாறை மாவட்ட ஓய்வு பெற்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம். சரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரும் இடைக்கால பணிப்பாளர் சபைத் தலைவருமான கோ.காந்தரூபன் தலைமையில் நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் ஏ.பீ.எம். சரீப் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பணிப்பாளர் சபைத் தெரிவில், ஒரு அணியினர் ஏழு உறுப்பினர்களை பெற்று சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பினை தமதாக்கினர். மாற்று அணியினர் இரண்டு உறுப்பினர்களை பெற்றுக் கொண்டனர்.

மூன்று வருட நிர்வாக காலத்துக்கானதாக இந்தப் பணிப்பாளர் சபை இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர் சபைத் தெரிவுக்கான தேர்தலில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.பீ.எம். சரீப் 38 வாக்குகளை பெற்றிருந்தார். ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் கலாநிதி ஏ. இல்முதீன், எம்.எஸ். ஜெனீஸ், ஊடகவியலாளர் கே. அப்துல் ஹமீட், ஐ.ரீ. ஹாமீம், எஸ்.ரீ.ஆதம்பாவா , எம்.எஸ்.சப்னா ஆகியோர் தெரிவாகியிருந்தனர். சங்கத்தின் தலைவர், உபதலைவர் தெரிவு ஏகமனதாக இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும். உப தலைவராக ஐ.ரீ. ஹானிம் தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து தலைவர், உபதலைவர் ஆகியோரை பொதுச்சபை உறுப்பினர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

கடந்த இரண்டு மாதமாக இடைக்கால பணிப்பாளர் சபையின் கீழ், அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கம் இயங்கி வந்தது.

மேற்படி பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பி.வரதராஜன், சங்கத்தின் செயலாளர் அல்-முனவ்வர் ஆகியோரும் கலந்துகொண்டர்.