நாமல், கோட்டா, பசில் என்று, எனக்கு சார்பானவர்கள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்து விடும்: மஹிந்த
தன்னுடைய புதல்வர் நாமல் ராஜபக்ஷ, சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகள் அனைவரையும் அரசாங்கம் கைது செய்துவிடும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாமல், கோட்டா, பசில், விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, குமார வெல்கம என்று எல்லோரையும் கைது செய்து, இறுதியில் இந்த ஆட்சியளர்கள் தன்னையும் கைது செய்வார்கள் என்றும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டினார்.
கண்டி தலதா மாளிகையில் சமய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
இதனிடையே, இதற்கு எதிராக பொதுமக்கள் திரண்டெழுவதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தினை திசை திருப்புவதற்கான சூழ்ச்சியே – இவ்வாறான கைது நடவடிக்கைகளாகும் என்றும் மஹிந்த இதன்போது கூறினார்.
இருந்தபோதும், மக்கள் ஆதரவு இன்னும் தனக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தாஜுத்தீன் கொலை தொடர்பாக நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையிலேயே, மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார்.