
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தின் போது, வில்பத்து பகுதியில் காடுகளை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ தலைவருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிரான ரிட் மனுவை, மேன்முறையீட்டு நீதின்றம் இன்று (15) தள்ளுபடி செய்தது.
நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோர், மனுவை 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்தனர்.
ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பலமுறை நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும், வழக்கை தாக்கல் செய்தவர்கள், நடைமுறைப்படி – வழக்கை முன்னெடுக்காமையினால், இந்த வழக்கு நீடித்து கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்குக்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், உண்மையான சட்டக் காரணங்களுக்காக அல்லாமல் ஊடக கவனத்தை பெறுவதற்காகவே, இந்த வழக்கு தொடரப்பட்டதாகவும் றிஷாட் பதியுதீனுடைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றில் வாதிட்டார்.
மேலும் மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கை முன்னெடுக்கத் தவறியதால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்த நிலையில், அதற்கிணங்க, குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனுதாரர்களுக்காக சட்டத்தரணி சுகந்திகா ஆஜரானார். 01 முதல் 03ஆம் பிரதிவாதிகளக்காக உப சட்ட மா அதிபர் மனோஹர ஜயசிங்க ஆஜரானார். பசில் ராஜபக்ஷவுக்காக சட்டத்தரணி ருவந்த குரே ஆஜரானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் சார்பாக சட்டத்தரணிகள் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ஷிபான் மஹ்ரூப் ஆகியோர் ஆஜராகினர்.
நீண்ட நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள்மூலம், இனவாத அரசியல் மேற்கொள்ளப்பட்டதுடன், வழக்க மக்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் இனவாத நடவடிக்கைகள் இடம்பெற்றன.



