தலைப்புச் செய்திகள்

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும் – 2025′ எனும் தொனிப்பொருளிலான வர்த்தக கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இன்று (25) மாலை 5.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

திருகோணமலை மக்கேஷர் விளையாட்டு மைதானத்தில், கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் காலிதா மஃறூப் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் வர்த்தக கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்துகொள்வார்.

நிகழ்வில் கிராமிய கைத்தொழில் நூதனசாலை, கைவினை பொருள் உற்பத்தி செய்முறை மற்றும் அனுபவ பகிர்வை பெற்றுக்கொள்ளும் நிலையம் ஆகியவற்றுடன் கிழக்குக்கே உரித்தான ‘கைத்தறிப் பொருட்கள் அழகு நயப்பு’ காட்சியும் இடம்பெறவுள்ளதுடன் உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

டிஜிட்டல் சந்தை வசதி மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான அறிவுரையை பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிராமிய கைத்தொழில் தொடர்பான தொழிநுட்ப அறிவை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளுடன் கைத்தொழில் மற்றும் சுற்றுலா தொடர்பான ஆலோசனை வழிகாட்டல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் – கிராமிய கைத்தொழில் திணைக்கள அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி தெரிவித்தார்.

நிகழ்வுக்கான அனுசரனையினை அரச, அரசார்பற்ற நிறுவனங்கள் வழங்கியுள்ளதாகவும் ஊடக அனுசரனையினை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேத்ரா தொலைக்காட்சி வழங்கியுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கண்காட்சியை கண்டுகழிக்க வரும் பொதுமக்களை மையப்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களின் நூற்றுக்கும் அதிகளவான விற்பனைக் கூடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நான்கு (04) நாட்கள் அதாவது 25,26,27 மற்றும் 28ஆந் திகதிகளில் இந் நிகழ்வான, திறந்த வெளியரங்கு நிகழ்வாக நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் நிகழ்வில் பிரதம செயலாளர், முதலமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.