
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு முறையான பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க, பிராந்திய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகரில் கூடிவருகின்றனர்.
காஸா மீதான இஸ்ரேலின் இரண்டு ஆண்டு – இனப்படுகொலை போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் உறுப்பினர்கள் தோஹா அலுவலகத்தில் கூடியிருந்தபோது விமாத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.
இஸ்ரேல் வசமிருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்காகவும், போர் நிறுத்தத்திற்கு ஈடாகவும் – காஸாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 48 கைதிகளையும் விடுவிக்கும் டிரம்ப் திட்டத்தை, இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கூறிய சில மணித்தியாலங்களின் பின்னர், இந்த தாக்குதல் நடந்தது.

அதில் ஐந்து ஹமாஸ் உறுப்பினர்களும், கத்தாரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். இருப்பினும் இஸ்ரேல் குறி வைத்த ஹமாஸ் தலைவர்கள் அந்தத் தாக்குதலில் கொல்லப்படவில்லை.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஏகமனதாக கண்டித்தது.
இந்தப் பின்னணியில் அரபு-இஸ்லாமிய நாடுகளின் அவசர கூட்டமொன்றை திங்கட்கிழமை நடத்துவதற்கு, அந்த நாடுகளின் தலைவர்களுக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது,
“இஸ்ரேல் மீது நடத்தப்படவுள்ள தாக்குதல் குறித்த வரைவுத் தீர்மானம் குறித்து உச்சிமாநாடு விவாதிக்கும்” என, கத்தாரின் வெளியுறவு அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் டிரம்பை சந்தித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, முழு பிராந்தியத்தையும் ஆபத்தில் ஆழ்த்திய தாக்குதலுக்கு கூட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.
காஸா மீது – இஸ்ரேல் நட்திவரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிராந்திய ஒற்றுமையை உருவாக்குவதற்கு, கத்தார் நீண்ட காலமாக மத்தியஸ்தப் பங்கை வகித்து வருகிறது.


