தலைப்புச் செய்திகள்

குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய, நாமல் குமாரவுக்கு எதிரான முறைப்பாடு விசாரணைக்கு எடுக்கப்பட்டது

– மப்றூக் –

புனித குர்ஆனையும், முஹம்மது நபியையும் அவதூறாகப் பேசிய நாமல் குமார என்பவருக்கு எதிராக, சட்டத்தரணி ஏ.எல். ஆஸாத் – பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவில் செய்திருந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்டது.

யூ-டியுப் தளத்தில் ஊடகவியலாளர் சமுத்தித்த தொடர்ச்சியாக நடத்திவரும் ‘ட்ரூத் வித் சமுத்தித்த’ (Truth with Chamuditha) எனும் நேர்காணல் நிகழ்ச்சியில் 2022ஆம் ஆண்டு கலந்து கொண்ட நாமல் குமார என்பவர், இஸ்லாத்தை இழிவுபடுத்திப் பேசியிருந்தார்.

பல்வேறு இனவாத நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டுவந்த, சர்ச்சைக்குரிய நாமல் குமார என்பவர், முஸ்லிம் விரோத போக்குடைய நபராக அடையாளம் காணப்பட்டவர்.

ஊடகவியலாளர் சமுத்தித்தவுக்கு வழங்கிய பேட்டியில், புனித குர்ஆனையும் முஹம்மது நபியையும் இகழும் வகையில், நாமல் குமார அவதூறாகப் பேசியிருந்தார்.

இதனையடுத்து, நாமல் குமாரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இயங்கும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்த சட்டத்தரணி ஆஸாத், இஸ்லாத்தை அவதூறு செய்யும் வகையில் மேற்படி நாமல் குமார, 28.02.2022 அன்று வெளியான ‘ட்ரூத் வித் சமுத்தித்த’ எனும் நிகழ்ச்சியில் பேசியதாக தெரிவித்திருந்தார்.

மேலும், நாமல் குமார எனும் நபர் – அவ்வாறு பேசியமை – குற்றவியல் தண்டனைச் சட்டம், சர்வதேச குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஒரு குற்றம் என்றும் சட்டதரணி ஆஸாத் – தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் – இவ்விடயம் தொடர்பான விசாரணைக்கு, இன்றைய தினம் முறைப்பாட்டாளர் சட்டத்தரணி ஆஸாத், பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

முறைப்பாட்டாளருடன் சட்டத்தரணிகள், ராஸி முகம்மட் மற்றும் வசீமுல் அக்ரம் ஆகியோரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்குச் சென்றிருந்தனர்.