
கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குழுவை கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலிருந்து இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை அமைச்சர் பாராட்டினார்.
இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் 27ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நேற்று (30) ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி கைது நடவடிக்கைக்கும், சந்தேக நபர்களை திருப்பி அனுப்புவதற்கும் தலைமை தாங்கிய இந்தோனேசிய அதிகாரிகள் மற்றும் இந்த நடவடிக்கையில் பங்கெடுத்த இலங்கை அதிகாரிகளை – விமான நிலையத்தில் அமைச்சர் விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோர் வரவேற்றனர்.
இது இவ்வாறிருக்க, இந்த நிகழ்வில் அமைச்சர் ஆனந்த விஜேபால – நிலத்தில் மண்டியிட்டமை போன்று ஒரு படம் வெளியாகியுள்ளதாகவும், அது போலியானது எனவும் – பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது பொதுமக்களை பிழையாக வழிநடத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட படம் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த போலிப் படத்தை உருவாக்கியவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை சிஐடி தொடங்கியுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.



