தலைப்புச் செய்திகள்

காஸாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள்

காஸாவை முழுமையாக – ராணுவ ரீதிய ரீதியில் கைப்பற்றுவதற்கான இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டம், அதிக இறப்புகளையும் துன்பங்களையும் ஏற்படுத்தும் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க் இன்று (08) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது என்றும், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் அவர் கூறியுள்ளார்.

ஒப்புக்கொள்ளப்பட்ட இரு-நாடு தீர்வை அடைவதற்கும், பலஸ்தீனர்களின் சுயநிர்ணய உரிமைக்குமாக, துர்க் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக நீடித்து வரும் பேரழிவு தரும் போர் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிரமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், காஸா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை இன்று காலை அனுமதி வழங்கியது.

முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முழு காஸா பகுதியையும் இஸ்ரேல் ராணுவக் கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

“இன்றுவரை உள்ள அனைத்து ஆதாரங்களின்படி, இந்த நடவடிக்கை இன்னும் பெரிய அளவில் கட்டாய இடம்பெயர்வு, அதிக கொலை, தாங்க முடியாத துன்பம், அர்த்தமற்ற அழிவு மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கு வழிவகுக்கும்” என்றும் துர்க் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தப் போரை தீவிரப்படுத்துவதற்குப் பதிலாக, இஸ்ரேலிய அரசாங்கம் காஸா மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு – தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மனிதாபிமான உதவிகளை முழுமையாகவும், தடையின்றியும் வழங்க அனுமதிக்க வேண்டும். அதேவேளை, பணயக்கைதிகள் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களால் விடுவிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்பான செய்தி: காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி