தலைப்புச் செய்திகள்

20 ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்றனர்: பிரதமர்

லங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 குழந்தைகள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுகின்றனர் என, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித்துடன் கலந்துரையாடிய போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“இன்று கல்வி தொடர்பாக எங்களுக்கு பல சிக்கல்கள் உள்ளன. எனது அமைச்சு நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 20,000 மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகுகின்றமை தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 300,000 பேர் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் நுழைகிறார்கள். இன்னும் சிலர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பேராயரிடம் பிரதமர் கூறினார்.

ஒரு பிள்ளை தனது உள்ளார்ந்த திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பொருத்தமான தொழில் பாதையில் செல்லவும் உதவும் கல்வி முறையின் அவசியத்தை, இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

“இன்றைய பிரச்சினை என்னவென்றால், அனைவரும் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைத் தேடுகிறார்கள். மற்றொரு பிரச்சினை என்னவென்றால், பலருக்கு லாபகரமான வேலைவாய்ப்பைப் பெற தொழில்நுட்ப திறன்கள் இல்லை” என்று அவர் கூறினார்.