
காஸாவை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜெருசலேமில் இன்று (08) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த திட்டத்திற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது.
காஸாவை ஆக்கிரமிப்பதற்கான திட்டங்கள் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகள் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு அறிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இது பாதுகாப்பு அமைச்சரவையில் பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“போர் நடக்கும் பகுதிகளுக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் அதே வேளையில், காஸா நகரத்தின் கட்டுப்பாட்டை எடுக்க இஸ்ரேல் ராணுவம் தயாராகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- ஹமாஸ் ஆயுதங்களை பயன்படுத்த முடியாதபடி செய்தல்
- உயிருடன் உள்ள மற்றும் இறந்த பணயக்கைதிகள் மீட்பு
- காஸாவில் இருந்து ஆயுதக்குழுக்களை அகற்றுதல்
- காஸாவை இஸ்ரேல் அதன் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
- ஹமாஸ் அல்லது பலத்தீனிய அதிகார சபைக்கு பதிலாக ஒரு மாற்று அரசாங்கத்தை அமைத்தல்
“அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட மாற்று திட்டத்தால் , ஹமாஸை தோற்கடிக்கவும், பணயக்கைதிகளை மீட்கவும் முடியாது என்று பெரும்பாலான அமைச்சர்கள் நம்புகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



