தலைப்புச் செய்திகள்

வடக்கில் 33 வைத்தியசாலைகள், ஒரு தாதி கூட இல்லாமல் இயங்குகின்றன: சுகாதார அமைச்சர்

வடக்கு மாகாணத்தில் உள்ள 33 பிராந்திய வைத்தியசாலைகள் தற்போது ஒரு தாதி கூட இல்லாமல் இயங்கி வருவதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிட திறப்பு விழாவில் நேற்று (12) கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவர் இதனைக் கூறினார்.

எனவே, எதிர்வரும் தாதி நியமனங்கள் மூலம் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

புதிதாக திறக்கப்பட்ட வெளி நோயாளர் பகுதியில் அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், தடுப்பூசி அறை, பல் பிரிவு, தாதியர் ஓய்வு பகுதி, ECG பிரிவு, சிறு அறுவை சிகிச்சை பிரிவு, முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகள் உள்ளன.

இங்கு அமைச்சர் தொடர்ந்து பேசுகையில்; சுகாதார அமைச்சராக யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு தான் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இது என்றும், இங்கு முதலாவது பார்வையிட்ட வைத்தியசாலை – நைனாதீவு வைத்தியசாலை என்றும் தெரிவித்தார்.