
ஈரான் எனும் பாம்பின் தோலை உரிப்பதை, இஸ்ரேல் தொடரும் என்று, பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஈரானின் தலைமை மற்றும் அந்த நாட்டின் ஆயுதக் கிடங்கிற்கு எதிராக, இந்தப் புதிய எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
“தளங்களைத் தாக்கி, தெஹ்ரானிலும் எல்லா இடங்களிலுமுள்ள – ஈரானிய பாம்பின் தோலை உரிப்பதைத் இஸ்ரேல் ராணுவம் தொடரும். ஈரானின் அணுசக்தி திறன்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை இஸ்ரேல் அகற்றும் ” என்றும், அவர் கூறியுள்ளதாக, இஸ்ரேலின் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
“ஈரானிய சர்வாதிகாரி தனது ஆட்சியின் பிழைப்புக்காக தெஹ்ரானை பெய்ரூட்டாகவும், தெஹ்ரானின் குடியிருப்பாளர்களை பணயக்கைதிகளாகவும் மாற்றியுள்ளார்” என்றும், இஸ்ரேல் காட்ஸ் – ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் மூன்றாவது நாளாக ஈரான் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



