
ஈரானிய ராணுவம் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் முழுவதும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஈரானின் சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து கூறுகையில்; ”இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகளை சேதப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானை தாக்கி பல தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொன்ற குற்றத்துக்காக – ‘கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும்’ என்று ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
ஆயினும், தேவைப்படும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் தலைநகரிலுள்ள குடியிருப்பு கட்டிடங்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தெஹ்ரானின் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறுபுறமாக, இந்த தாக்குதல்களில் அமெரிக்கா சம்பந்தப்படவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
மேலும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கக் கூடாது எனவும் அ அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஈரானை எச்சரிக்கிறார்.



