தலைப்புச் செய்திகள்

ரணில் காலத்தில் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னர், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிதியமைச்சர் என்ற முறையில், கலால் கட்டளைச் சட்டத்தை மீறி, மதுபான விற்பனை உரிமங்களை வழங்கியதன் மூலம். அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை தொடர்வதற்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட ஒரு குழுவால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, முன்னாள் கலால் ஆணையர் எம்.ஜே. குணசிறி ஆகியோர் மனுக்களில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடைபெறும் வரை வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் மற்றும் 2024 முழுவதும் வழங்கப்பட்டவை தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்ற அமர்வு – கலால் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மனுக்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு – இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் சஞ்சீவ ஜெயவர்தன மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர், தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 21 வரையிலான காலகட்டத்தில், தேர்தல் சட்டத்தை மீறி பிரதிவாதிகளால் புதிய மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் 19 வயது மகனும் இந்த காலகட்டத்தில் மதுபான உரிமத்தைப் பெற்றுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த முறையில் மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டதாக சட்டத்தரணிகள் மேலும் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது – அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் இந்த உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன, இந்த மனுக்கள் வரம்புகள் சட்டத்தின் பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்கள் நீதிமன்றத்திலிருந்து உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

வழக்கின் அடிப்படையாக அமைந்த கலால் கட்டளைச் சட்டம் தொடர்பான விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டு – புதியவற்றினால் மாற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுக்களை விசாரிக்க அனுமதி அளித்து, விசாரணையை நொவம்பர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.