மாலக சில்வா, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்குச் செல்வதற்கான தடை நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா – இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு (Night clubs) செல்ல, நீதிமன்றம் விதித்திருந்த தடை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், நேற்று வியாழக்கிழமை இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.
இரவு நேரக் களியாட்ட விடுதியொன்றில், வெளிநாட்டுத் தம்பதியினரை மாலக சில்வா தாக்கியமை தொடர்பான வழக்கு – கடந்த வருடம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு மாலக சில்வா செல்லக் கூடாது எனும் தடையினை நீதிமன்றம் விதித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைகளுக்காக நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது, மாலக சில்வாவுக்கான தடையுத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வெளிநாட்டுத் தம்பதியினருடன் சமரசம் செய்து கொள்வதற்கு மாலக சில்வா விரும்புவதாக அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்ததோடு, மாலக சிவ்வாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையுத்தரவினை அகற்றுமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
ஆயினும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினரியினரின் சட்டத்தரணிகள், இதை மறுத்ததோடு, சமரசம் செய்து கொள்வது பற்றி, குறித்த தம்பதியினரிடம் பேசப்படவில்லை எனவும் கூறினர்.
இதனையடுத்து எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், அதுவரை இரவு நேரக் களியாட்ட விடுதிகளுக்கு மாலக சில்வா செல்லக் கூடாது என்று விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு நீடிக்கும் எனவும் நீதவான் அறிவித்தார்.