தலைப்புச் செய்திகள்

வாயைக் கொடுத்து அரசாங்கத்தை புண்ணாக்கினார் ஆளுந்தரப்பு எம்.பி நிலந்தி கோட்டஹச்சி

முன்னைய ஜனாதிபதி குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியமையினால் ஏற்பட்ட செலவு தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்த தகவல்களில் பிழை இருப்பதாகத் தெரிகிறது என – அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் பேரணியொன்றில் அண்மையில் உரையாற்றிய ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி, பொதுமக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அனுப்பிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை – இந்த ஆண்டு அனுப்பாததன் மூலம், 98 மில்லியன் ரூபாயை அரசாங்கம் மிச்சப்படுத்தியதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஊடகமொன்றில் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்த கோட்டஹச்சி தெரிவித்த செலவு விவரம் பிழையானது போல் இருப்பதாகவும், சமூக ஊடகங்களில் பரவிய ஒரு அறிக்கையிலிருந்து அதை அவர் எடுத்ததாகவும் கூறினார்.

“அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தேசிய மக்கள் சக்தி இங்கே உள்ளது. எனவே, நாங்கள் கூறும் அறிக்கைகளுக்கு நாங்கள் கூடுதல் பொறுப்பேற்க வேண்டும். இதில் உள்ள குறைபாடுகள் தீங்கு விளைவிக்கும். இந்த தவறுகளை சரிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்றும் அமைச்சர் நலிந்த குறிப்பிட்டார்.

அரசாங்கம் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாகவும், இதனால் அதன் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகம் குறித்த ஊடகம் வினவியபோது; ​​தமதுகட்சி இந்த சம்பவங்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அவற்றை சரிசெய்ய ஏற்கனவே தலையிட்டுள்ளதாகவும் நலிந்த தெரிவித்தார்.

ஒன்று அல்லது ஐந்து எம்.பி.க்களின் செயல்களையும் அறிக்கைகளையும் வைத்துக் கொண்டு, முழு அரசாங்கமும் பொய் சொல்கிறது அல்லது பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறது என்ற அனுமானத்திற்கு வர முடியாது என்றும், அமைச்சரவைப் பேச்சாளர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போது ஏற்பட்ட செலவு பற்றியே, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹாச்சி தெரிவித்திருந்தார்.

பொதுமக்களுக்கு அனுப்பப்பட்ட ஜனாதிபதியின் புத்தாண்டு குறுஞ்செய்திளை, குறித்த தொலைபேசி நிறுவனங்கள் இலவசமாகவே அனுப்பியதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.