
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் எஃப்.பி.ஐ (FBI) கண்டுபிடித்த விடயங்களை இலங்கை நிராகரித்தால், அமெரிக்கா எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.
இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மிலிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கிய ஒரு நேர்காணலின் போது, அவர் இதனைக் கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் சஹ்ரான் ஹாஷிம்-தான் மூளையாக செயல்பட்டார் என்று எஃப்.பி.ஐ (FBI) யின் விசாரணையில் முடிவு செய்யப்பட்டதாகவும் ரணில் இதன்போது குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை வேறுபட்ட கதையை வெளியிட முயன்றால், அது அப்போது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக் கூடும் என்றும், அவர் தனது பதவிக் காலத்தில் – உக்ரைனின் ஜனாதிபதியை நடத்தியது போன்று, அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ அல்லது ராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக் கூடும் என்றும் ரணில் எச்சரித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், விசாரணைகளுக்கு உதவ எஃப்.பி.ஐ (FBI) ஐ நியமித்ததாகவும் ரணில் விக்ரமசிங்க நினைவு கூர்ந்தார்.
“நான் அமெரிக்க தூதுவரை தொடர்பு கொண்டபோது, ஒரு எஃப்.பி.ஐ (FBI) குழு ஏற்கனவே நாட்டிற்கு வந்திருந்தது. பின்னர் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்னுடன் பேச விரும்புவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, நாங்கள் தொலைபேசியில் உரையாடினோம். அந்த நேரத்தில், ஜனாதிபதி டிரம்ப் எஃப்.பி.ஐ (FBI) உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார். அமெரிக்க தூதருடனான சந்திப்பின் போது, ஒரு எஃப்.பி.ஐ (FBI) பிரதிநிதியும் பங்கேற்றார். ‘ஸ்கொட்லான்ட் யார்ட்’ம் வந்தது. மேலும் இங்கிலாந்தும் உதவி வழங்கியது” என்றும் அந்த நேர்காணலில் ரணில் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்களை அமெரிக்க முகவர் விசாரித்து வந்த நேரத்தில் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதாகக் கூறிய ரணில் விக்ரமசிங்க; “அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இருந்த போது இது நடந்தது” என்றார்.
“இப்போது, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். சஹ்ரான் ஹாஷிம் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறும் அறிக்கையை நான் நம்புகிறேன். இப்போது, இதை மீண்டும் ஒருமுறை நாம் குழப்பினால் என்ன நடக்கும்? ஜனாதிபதி டிரம்பை கோபப்படுத்துவதன் விளைவுகள் உங்களுக்குத் தெரியும். எங்களால் எதுவும் செய்ய முடியாது. உண்மையைக் கொண்ட அமெரிக்க-எஃப்.பி.ஐ அறிக்கை என்னிடம் உள்ளது. இது தொடர்பாக நாம் மோத முடியாது. இது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நடந்தது போன்ற ஒரு சம்பவத்திற்கும், வரி உயர்வுக்கும் வழிவகுக்கும்” என்றும் ரணில் எச்சரித்துள்ளார்.



