தலைப்புச் செய்திகள்

தேசபந்துவுக்கு பிணை வழங்கப்பட்டமைமையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படும்: மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்கியதை எதிர்த்து மேல் நீதிமன்றில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்யப்படும் என, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய இரண்டு சரீரப் பிணைகளில் – தேசபந்து தென்னகோனுக்கு இன்று பிணை வழங்கி உத்தரவிட்டார்.

சாட்சிகளின் விடயத்தில் சந்தேக நபர் தலையிடக்கூடாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் பிணையை ரத்து செய்ய வழிவகுக்கும் என்றும் நீதவான் கடுமையாக எச்சரித்தார்.

பிணை நிபந்தனைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபருக்கு பயணத் தடையை நீதிமன்றம் விதித்ததுடன், அவரின் கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இதன்போது சந்தேக நபரை பினையில் விடுவிப்பதை மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கடுமையாக எதிர்த்தார். மேலும் நடந்து வரும் விசாரணைகள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், சந்தேக நபரை விடுவிப்பது விசாரணை செயல்முறைக்கு கடுமையான தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், வழக்கு ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சந்தேக நபர் மீண்டும் சமூகத்தில் நுழைவது, நடந்து வரும் செயல்முறையின் நேர்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவிடம் இந்த சம்பவம் தொடர்பாக – ஏப்ரல் 4 ஆம் திகதி, சிஐடிஅதிகாரிகள் ஒரு வாக்குமூலம் பதிவு செய்ததாக இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். அந்த வாக்கு மூலத்தின் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் சொய்சா தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி விசேட பாதுகாப்பைக் கோரியிருந்தார் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

“எனது சட்ட வாழ்க்கையில் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சிஐடி-க்குள் இருந்து கொண்டு பாதுகாப்பு கோரியது இதுவே முதல் முறை. இது தேசபந்து தென்னகோன் சம்பந்தப்பட்ட வழக்கின் தீவிரத்தன்மையைக் குறிக்கிறது” என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.