தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தவறாக நிதி பெற்ற குற்றச்சாட்டு: அமைச்சர்கள், எம்.பிகள் 22 பேர் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி நிதியிலிருந்து 2008 முதல் 2024 வரை நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த நடவடிககையைத் தொடங்கியுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை வழங்குவது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்தாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் மொத்தமாக 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளதாக முதற்கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியைப் பெற்றுக் கொண்டதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதைத் தீர்மானிக்க தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக – ஜனாதிபதி நிதியக் கணக்கிலிருந்து வழங்கப்பட்ட காசோலைகளின் விவரங்களைப் பெறுவதற்கான உத்தவை, சிஐடி அதிகாரிகள் நேற்று (02) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.