
காஸாவில் தொடங்கிய யுத்த நிறுத்தத்தை, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக ரத்துச் செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
யுத்த நிறுததத்தை மீறி இஸ் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 342 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என, காஸா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையில் ஜனவரி 19 அன்று யுத்த நிறுத்தம் தொடங்கியது.
“நெதன்யாகுவும் அவரது தீவிரவாத அரசாங்கமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவெடுக்கின்றன, இதனால் காஸாவில் உள்ள கைதிகள் அறியப்படாத விதிக்கு ஆளாகின்றனர்” என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் வேண்டுமென்றே இஸ்ரேல் நாசப்படுத்துகிறது” என்று – பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஆயுத அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் “இனிமேல், இஸ்ரேல் அதிகரித்து வரும் ராணுவ வலிமையுடன் ஹமாஸுக்கு எதிராக செயல்படும்” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இஸ்ரேல் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள், மீதமுள்ள கிட்டத்தட்ட 60 கைதிகளை விடுவிப்பது மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை நிறுவுவது ஆகியவை, ஏப்ரல் நடுப்பகுதி வரை – முதல் கட்டத்தை நீடிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியதால் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸ் சுமார் 36 கைதிகளை விடுவித்துள்ளது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், காஸா மீதான தாக்குதல் தொடரும் என்று சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மீதமுள்ள கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.
“அனைத்து பணயக்கைதிகளும் வீடு திரும்பும் வரையும் போரின் அனைத்து நோக்கங்களும் அடையப்படும் வரை நாங்கள் சண்டையை நிறுத்த மாட்டோம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



