தலைப்புச் செய்திகள்

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு பிணை

ஸ்லாம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக, ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை பரிசீலித்த பின்னர், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இஸ்லாம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததற்காக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனவரி 09, 2025 அன்று, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்தது.

தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1,500 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

கிருலப்பனை பகுதியில் ஜூலை 16, 2016 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​”இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று கூறி இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் -கலகொட அத்தே ஞானசார தேரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.