
கனேமுல்ல சஞ்ஜீவ என்பவரை கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று (19) புகுந்து சுட்டுக் கொன்றவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் – சமிந்து தில்ஷான் பியுமங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜேபால, சந்தேக நபர் மஹரகமவைச் சேர்ந்தவர் என்றும், நேற்று மாலை புத்தளம் – பாலாவியாவில் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். “இந்த சந்தேக நபர் கடந்த இரண்டு வாரங்களில் நடந்த பல கொலைகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரின் பெயர் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் (34) என்று – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் ஊடகங்களிடம் பேசிய பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பல பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.
“சந்தேக நபர் பல மாற்றுப் பெயர்களையும், பல அடையாள அட்டைகளையும் பயன்படுத்தியிருப்பது தெளிவாகிறது. முதலில் அவர் முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்றும் பின்னர் சமிந்து தில்ஷான் பியுமங்க கண்டனாராச்சி என்றும் அறியப்பட்டார்” என்று புத்திக மனதுங்க கூறினார்.
சட்டத்தரணி ஒருவரின் அடையாள ஆவணத்தைப் பயன்படுத்தி வந்த சந்தேக நபர், கொடிகரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரையும் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊடகமொன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமிந்து தில்ஷான் பியுமங்க கண்டனாராச்சி என அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் பல்வேறு மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்தியதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் புத்தளத்திற்கு தப்பிச் செல்ல பயன்படுத்திய வேனின் சாரதியும் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான தொடர்ச்சியான தகராறுகளின் விளைவாகும் என்றும், இது தேசிய பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
“இவை பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான மோதல்கள் காரணமாக – மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்கள். இந்த நாட்டில் நீண்ட காலமாக இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தனிப்பட்ட சம்பவத்தை – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்பான செய்தி: நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; கனேமுல்ல சஞ்சீவ பலி: சட்டத்தரணி போல் வந்தவர் கைவரிசை



